ETV Bharat / education-and-career

ரயில்வே பணி வேண்டுமா? உங்களுக்கு உதவ காத்திருக்கும் ‘ரயில்வே கணிதம்’ புத்தகம்

‘ரயில்வே கணிதம்’ என்ற வழிகாட்டு நூலின் 100 படிகளை மதுரை மாவட்ட நூலகங்களுக்கு பாண்டுரங்கன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் வழங்கினர்.

‘ரயில்வே கணிதம்’ புத்தகத்தை வழங்கும் இளைஞர்கள்
‘ரயில்வே கணிதம்’ புத்தகத்தை வழங்கும் இளைஞர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 15, 2025 at 5:47 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: சொந்த உழைப்பில் தாங்களே உருவாக்கிய ‘ரயில்வே கணிதம்’ என்ற ரயில்வே தேர்வுக்கான வழிகாட்டு நூலை மதுரை மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு இலவசமாக வழங்கி இரு இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியருக்காக, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலான தங்களது கடும் உழைப்பில் உருவாக்கிய ‘ரயில்வே கணிதம்’ என்ற வழிகாட்டு நூலின் 100 படிகளை மதுரை மாவட்ட நூலகங்களுக்கு பாண்டுரங்கன் மற்றும் திருஞானசம்பந்தம் என்ற இளைஞர்கள் வழங்கினர். இவை ஒவ்வொன்றும் ரூ.600 மதிப்புள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திருஞானசம்பந்தம் கூறுகையில், “நான் திண்டுக்கல்லில் ஐடிஐ முடித்து விட்டு, பாண்டுரங்கனுடன் இணைந்து ரயில்வே தேர்வு எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். அவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சிகளை வழங்குகிறோம்.

குறிப்பாக, அரசு பள்ளி மாணவ மாணவியருக்கும், ஐடிஐ மாணவ மாணவியருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவித்து வருகிறோம். தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் ரயில்வே பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இதனை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக எங்களது கடும் உழைப்பில் உருவாக்கப்பட்ட ‘ரயில்வே கணிதம்’ என்ற இந்த நூலை மதுரை மாவட்டத்தில் உள்ள 100 நூலகங்களுக்கு இன்று வழங்கினோம். மாவட்ட மைய நூலகர் பால சரஸ்வதி எங்களை ஊக்குவித்ததுடன், அங்கு டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவியரிடம் ரயில்வே தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு உரையாற்றவும் அனுமதி அளித்தார்.

‘ரயில்வே கணிதம்’ புத்தகத்தை உருவாக்கிய பாண்டுரங்கன் (இடது), திருஞானசம்பந்தம் (வலது)
‘ரயில்வே கணிதம்’ புத்தகத்தை உருவாக்கிய பாண்டுரங்கன் (இடது), திருஞானசம்பந்தம் (வலது) (ETV Bharat Tamil Nadu)

கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு இந்த நூல்களை இலவசமாக வழங்கினோம். அதே போன்று சேலத்திலும், தற்போது மதுரையிலும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை வழங்கியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

மேலும், “ரயில்வே துறையில் தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கவனம் எடுத்து படிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழிலேயே இந்த வழிகாட்டியை நாங்கள் தயாரித்து உள்ளோம். ரயில்வே தேர்வுகள் தற்போது மாதந்தோறும் நடைபெற்று வருகின்றன. அதனை தமிழ்நாட்டு மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: வெள்ளி விலை உயர்வால் அச்சப்பட வேண்டாம் - முதலீடு செய்ய உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

இந்த ‘ரயில்வே கணிதம்’ புத்தகத்தை, ரயில்வே பணிக்கு தயாராகி வருவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நூலக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.