ETV Bharat / education-and-career
தேர்வு, நேர்காணல் இல்லாமல் தபால் துறையில் வேலை; சம்பளம் முதல் விண்ணப்பம் வரை - நீங்கள் அறியாத தகவல்கள் இதோ
ஜிடிஎஸ் பதவிகளில் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் பல்துறை ஊழியர் பதவிக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published : August 31, 2026 at 8:01 AM IST
|Updated : September 3, 2026 at 5:31 PM IST
இந்திய அஞ்சல் துறையில் உள்ள 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2,118 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால், பெரும்பாலானவர்கள் இப்பணிக்கு ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
நகர புறத்தில் இருப்பவர்களை விட கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. அதே வேளையில், இப்பணி குறித்து பல்வேறு விதமான சந்தேகங்கள் இளைஞர்கள் மத்தியில் எழுகிறது. இது நிரந்தர அரசு பணியா? அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் இப்பணியில் கிடைக்குமா? தேர்வு செய்யப்படும் முறை என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில், இப்பணி குறித்த கேள்விகளுக்கான விளக்கங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பணியின் தன்மை என்ன?
கிராமின் தக் சேவக் (GDS) என்ற பிரிவின் கீழ் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தக் சேவக் ஆகிய பதவிகள் உள்ளன. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு தேர்வாகும் நபர்கள், கிளை தபால் நிலையம் மற்றும் இந்தியா அஞ்சல் வங்கியில் தினசரி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தபால் துறையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.
தினசரி கடிதங்கள் முறையாக கொண்டு செல்லப்படுகிறாதா? என்பதை கண்காணிப்பது முதல் அந்த கிளை தாபல் நிலையத்தின் முழு பொறுப்பையும் ஏற்று செயல்பட வேண்டும். அதே போன்று, உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு தேர்வாகும் நபர்கள், கடிதங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்வது, அஞ்சல் தலை உள்ளிட்ட தபால் பொருட்களை விற்பனை செய்வது, இந்திய அஞ்சல் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு கணக்கு சேவையில் உதவுவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும், கிளை போஸ்ட் மாஸ்டருக்கு தபால் நிலையத்தை நடத்த உதவியாக இருக்க வேண்டும்.
தக் சேவக் என்பவர் தபால் நிலையங்கள், கடிதங்கள் பிரிக்கும் இடம், டெலிவரி மையம் உள்ளிட்ட இடங்களின் பணியமர்த்தப்படுவார்கள். எங்கு பணி நியமிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து பணியின் தன்மை அமையும். இந்த மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அந்த கிளை தபால் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்பது அவசியமாகும்.
நிரந்தர அரசு வேலையா?
இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இப்பதவிகள் அரசு பணியாக இருப்பினும், மத்திய அரசின் நிரந்தர ஊழியர்களுக்கான நேரடி தகுதிக் கொண்ட வேலை கிடையாது. இப்பதவிகளில் தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம், படி மற்றும் இதர சலுகைகள் அரசு ஊழியர்களுக்கு நிகரானது கிடையாது.
அஞ்சல் துறையின் கிராமின் தக் சேவக் விதிமுறைகள் 2020-க்கு உட்பட்டு, இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த விதிமுறைகள் நேரத்திற்கு ஏற்ப திருத்தம் செய்யப்படும். மேலும், இவை இந்திய அரசியலமைப்பில் பிரிவு 309 கீழ் வகுக்கப்பட்டவை கிடையாது எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவு 309 என்பது அரசு ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கிறது.
இப்பணிகள் நிரந்த அரசு வேலை கிடையாது என்றாலும், ஜிடிஎஸ் பதவிகளுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளில் சம்பளம், கொடுப்பனை, பணிக்கொடை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
முழு நேர வேலையா?
மற்றொரு முக்கியமான தகவல் இப்பணி முழு நேர பணி கிடையாது. ஜிடிஎஸ் விதிமுறைகளின் படி, ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் அதிகபடியாக 5 மணி நேரம் வரை பணியாற்றலாம். நேரத்தின் அடிப்படையிலான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, இப்பணியில் இருப்பவர்கள் வேறு வேலையில் இருக்கக்கூடாது என்பது கிடையாது. வாழ்வாதத்திற்கான இதை தவிர வேறு வருமானத்தைக் கொண்டிருக்க வேண்டும். தேர்வாகி பணி நியமனம் பெறுபவர்கள் 65 வயது வரை பணியாற்றலாம்.
சம்பளம், சலுகைகள் என்னென்ன?
கிராமின் தக் சேவக்களாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, காலம் சார்ந்த தொடர்ச்சிப் படி (TRCA) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அதன்படி, கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரையும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தக் சேவக் பதவிகளுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு வருடத்திற்கு 3% சம்பள உயர்வு உண்டு. இவைமட்டுமின்றி, அகவிலைப்படி, இதர செலவினங்களுக்கான தொகை மற்றும் சமூக பாதுகாப்பு சலுகைகளும் வழங்கப்படும். அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு நிகராக, ஜிடிஎஸ் பணிக்கொடை மற்றும் பணி விடுவிப்புப் பயன் திட்டம் என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்வு, நேர்காணல் கிடையாது
இப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதிப் பெறுவார். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்றப்படும். அதன்படி, விண்ணப்பதார்களின் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி இயக்கும் திறன், மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவை தெரிந்திருப்பது அவசியமாகும். செப்டம்பர் 21-ம் தேதியின்படி, 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.
அஞ்சல் துறையில் நிரந்த பணியை பெற முடியுமா?
ஜிடிஎஸ் ஊழியர்கள் அஞ்சல் துறையில் உள்ள பல்துறை ஊழியர், தபால்காரர், தபால் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பதவி உயர்வை பெற முடியும். ஜிடிஎஸ் பதவிக்கு தேர்வு இல்லை என்றாலும், நிரந்தர வேலையை பெற கட்டாயம் துறை ரீதியாக நடத்தப்படும் போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஜிடிஎஸ் பதவிகளில் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் பல்துறை ஊழியர் பதவிக்கு விண்ணப்பித்து, தேர்வை எழுதலாம்.
5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் தபால்காரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அதே போன்று, குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள் தபால் உதவியாளர் அல்லது தபால் பிரிக்கும் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதலாம். இவைமட்டுமின்றி, பட்டப்படிப்பு வரை முடித்து ஜிடிஎஸ் பதவியில் இருப்பவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் வங்கியிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக இன்று (ஆகஸ்ட் 31) முதல் பதவு செய்து, செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ. 100 விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள், திருநங்கைகள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

