ETV Bharat / education-and-career
வெளிநாட்டில் இலவசமாக படிக்க என்ன செய்ய வேண்டும்? அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவது எப்படி?
வெளிநாடுகளில் உயர்தர கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை படிக்க தமிழ்நாடு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Published : August 21, 2026 at 8:00 AM IST
|Updated : August 29, 2026 at 12:24 PM IST
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது, வழிமுறைகள் என்ன, தகுதிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்
தமிழ்நாடு அரசின் சமூக நீதி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெளிநாடுகளில் உயர்தர கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான கல்வி உதவித்தொகை, விசா, விமானக் கட்டணம், இருப்பிடம், உணவு மற்றும் கல்விக்கான இதர செலவுகளுக்கு உதவும் வகையில் அதிகபடியாக ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் ரூ. 2.57 கோடி செலவில் 9 மாணவர்கள் மட்டுமே பயன்பெற்ற நிலையில், படிப்படியாக இத்திட்டம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 2024-2025 கல்வி ஆண்டில் ரூ. 60.33 கோடி செலவில் 174 பேர் பயனடைந்துள்ளனர்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்னென்ன?

- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேல் குறிபிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் (QS World University Ranking) இடம்பெற்ற முதல் 1000 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் (Master's Degree) அல்லது முனைவர் ஆராய்ச்சி படிப்பில் (Ph.D. / Post Doctoral Research) சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
- இத்திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்றுத்தரப்படாது.
- முதுகலைப் பட்டப்படிப்புக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்த கல்வியாண்டில் ஏப்ரல் மாதத்தின் படி, 35 வயதை நிறைவு செய்திருக்கக்கூடாது.
- அதே போன்று, முனைவர் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 40 வயதை நிறைவு செய்திருக்கக்கூடாது.
- மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.
என்னென்ன படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்?
கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை, மருத்துவம் ஆகிய முதன்மையான துறைகள் மட்டுமின்றி, நுண்கலைகள், பயன்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி, சட்டம் ஆகிய துறைகளில் முதுகலை அல்லது முனைவர் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கிறவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
முதுகலைப் பட்டப்படிப்பு என்றால் 3 வருடங்கள், முனைவர் படிப்பு என்றால் 4 வருடங்கள் மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வு படிப்பிற்கு 1.5 வருடங்கள் என உதவித்தொகை வழங்கப்படும்.
எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும்?
விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு அதிகமாக இல்லாத நிலையில், ஒரு ஆண்டுக்கு ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். அதுவே, ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்தை கடந்து ரூ. 12 லட்சத்திற்கு குறைவாக இருப்பின் அவர்களுக்கு ரூ. 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இதில் ஒவ்வொரு ஆண்டு கல்வி கட்டணம் தவறாமல் தமிழ்நாடு அரசின் மூலம் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு செலுத்தப்படும். அந்த கட்டணம் போக மீதமுள்ள கட்டணம் அங்கு வாழ்வதற்கான செலவுகள், விசா கட்டணம், மருத்துவ காப்பீடு ப்ரீமியம் தொகை மற்றும் அதற்கான வரி ஆகியவற்றுக்காக மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், இந்த தொகையிலேயே தொடக்கத்தில் செல்வதற்கான விமான கட்டணம் மற்றும் படிப்பு முடிந்து திரும்புவதற்கான விமான கட்டணம் வழங்கப்படும்.
ஒருவேளை இத்திட்டத்தின் கீழ் தேர்வாவதற்கு முன்பே கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால், அந்த கட்டணம் மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?
- வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம்
- வகுப்பு சான்றிதழ்
- சமீபத்திய குடும்ப வருமானச் சான்றிதழ்
- 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
- இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புச் சான்றிதழ்
- ஆதார் அடையாள அட்டை
- குடும்ப அட்டை
- கடவுச் சீட்டு
- பெற்றோரின் / விண்ணப்பதாரரின் வருமான வரி தாக்கல் (ITR) ஆவணங்கள்
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏப்ரல் - மே மாதத்தில் விண்ணப்பம் பெறப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும். மாணவர்கள் https://tnadwscholarship.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மேல் குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட்/ செப்டம்பர் சேர்க்கைக்கு ஏற்ப ஜூலையில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

சேர்க்கை உறுதியான உடன் வெளிநாடு செல்வதற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேறு ஏதேனும் அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து முடித்தவர்கள் மற்றும் கடனுதவி பெற்று படித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? முன்னுரிமை யாருக்கு?
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதில் க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். அதன்படி, தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் சேர்க்கை பெற்றவர்களுக்கு முக்கியதுவம் வழங்கப்படும்.
அதே போன்று, ஒரு கல்வியாண்டிற்கான நிதியில் 10 சதவீதம் எஸ்டி சமூக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநங்கை, திருநம்பிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
| இதையும் படிங்க: குரூப் 2 தேர்வுக்கு கணினி வழியில் தட்டச்சு, சிஓஏ சான்றிதழ் பெற்றவர்கள் ஒரே சான்றிதழ் எண்ணை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் |
ஒருவேளை விண்ணப்பதார்களின் இருவர் ஒரே பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றவர்கள் என்றால், அவர்களின் 10, 12, இளநிலை, முதுநிலை ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி உதவித்தொகையில் பயின்று வரும் மாணவர் தகவறான தகவல் அளித்தல், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுதல் அல்லது பல்கலைக்கழகத்தினால் நீக்கப்பட்டது ஆகியவை கண்டறியப்பட்டால், அரசினால் வழங்கப்பட்ட முழு கல்வி உதவித்தொகையை 12 சதவீத வட்டியுடன் மாணவர் திரும்பி தர வேண்டும்.
அதே போன்று, படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களும் உதவித்தொகையை 12 சதவீத வட்டியுடன் மாணவர்கள் திரும்பி தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

