E20 பெட்ரோல்: உணவு பாதுகாப்புக்கே சவாலாக மாறுமா எத்தனால் உற்பத்தி? - ஒரு விரிவான அலசல்
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், E20 பெட்ரோலை எதிர்க்க முன்வைக்கப்படும் பொதுவான வாதம் மைலேஜும், சர்க்கரை விலையேற்றமும். ஆனால், உண்மையான வாதமாக இருந்திருக்க வேண்டியது நிலமும், தண்ணீரும்தான்.

By R Srinivasan
Published : September 2, 2026 at 11:52 PM IST
இந்தியாவில் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், நூறு சதவீதம் முழுமையான பெட்ரோல் அல்ல என்பது கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆம், தற்போது நமக்கு கிடைப்பது E20 பெட்ரோல்தான். அதாவது 20 சதவீதம் எத்தனால் + 80 சதவீதம் கலப்பிலான பெட்ரோல்.
இப்போது இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்திதான் நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று, வாடிக்கையாளர்களின் பணம்.
அதாவது, நூறு சதவீதம் தூய பெட்ரோலுக்கு வாடிக்கையாளர்கள் முன்பு கொடுத்த பணத்தை தானே, இந்த எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் கொடுக்கிறார்கள் என்பது பலரும் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.
E20 பெட்ரோல் - வாடிக்கையாளர்களை பாதிப்பது எப்படி?
முழுமையான பெட்ரோலை ஒப்பிடுகையில், எத்தனாலின் எரிதிறன் 20 முதல் 30 சதவீதம் குறைவு. இதனால் E20 பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்கள் குறைந்த மைலேஜை தான் தருகின்றன என்பது பெரும்பாலான மக்கள் வைக்கும் விமர்சனமாக இருக்கிறது. இதனை ஈடு செய்ய, கூடுதலாக பெட்ரோல் வாங்க வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இதுவும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.
அது மட்டுமா? E20 பெட்ரோலை முறையாக கையாளும் திறன் இல்லாத வாகனங்களின் இன்ஜின்கள் சேதமடைவதையும் சிலர் முக்கிய வாதமாக வைக்கிறார்கள்.

எகிறும் சர்க்கரை விலை
இதற்கு அடுத்தப்படியாக, E20 பெட்ரோலால் சர்க்கரையின் விலை தாறுமாறாக ஏறுவது பொதுமக்களை அதிக அளவில் பாதிக்கிறது. கரும்பில் இருந்து எடுக்கப்படும் கரும்புச் சாறின் மிகப்பெரிய பகுதி, முன்பை போல சர்க்கரை தயாரிப்பதற்காக செல்லாமல், தற்போது எத்தனால் தயாரிப்பதற்காக அனுப்பபடுகிறது.
இதனால் சர்க்கரையின் தேவை அதிகரித்து, அதன் விலை கடுமையாக உயர்கிறது என்கிற கருத்து நிலவுகிறது.
ஏற்க மறுக்கும் அரசாங்கம்
ஆனால், மேற்கூறிய அனைத்து வாதங்களும் அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகின்றன என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். சர்க்கரை விலையேற்றத்தை பருவநிலை மாற்றத்தின் விளைவு எனக் கூறும் அரசாங்கம், வாகனங்களின் மைலேஜ் குறைவதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களை கைக்காட்டி செல்கிறது.
அதேபோல, E20 பெட்ரோலை பயன்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு பல வகைகளில் செலவு வைக்கிறது என்ற வாதத்திற்கு, நாட்டின் பொருளாதார சேமிப்பு உயர்வதை கணக்கு காட்டுகிறது.
'E20 பெட்ரோலால் பொருளாதாரம் உயர்கிறது'
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என பட்டியலிட்டு மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி முதலாவது, பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுவதால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.1.90 லட்சம் கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்படுகிறதாம். இரண்டாவது, இதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்த 310 லட்சம் மெட்ரிக் டன் அளவு கச்சா எண்ணெய்யை, எத்தனால் பதிலீடு செய்கிறதாம்.
கார்பன் உமிழ்வு குறைவு
மூன்றாவது, E20 பெட்ரோலால் கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றம் பெருமளவு குறைகிறதாம். நான்காவது, எத்தனால் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம், கரும்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி பணம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறதாம். இதுதான் அரசாங்கம் சொல்லும் 'நன்மை கணக்கு'.
| இதையும் படிங்க: "ஆன்மாவுக்காவது விடுதலை கிடைக்கட்டும்" - நேபாளத்தில் பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்யும் உறவினர்கள் |
மறுக்கவில்லை.. ஆனால்,
அரசாங்கத்தின் இந்த வாதத்தை நாம் மறுக்கவில்லை என்றாலும், சில நுணுக்கமான விஷயங்களை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது, எத்தனால் கலப்பு பெட்ரோலால் நாட்டின் பண சேமிப்பு உயர்கிறது என்பதை, கோடிக்கணக்கான வாகனங்களின் மைலேஜ் பாதிப்புடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
வரவுக்கு மேல் செலவுதான் அதிகம்
அந்நிய செலாவணி சேமிப்பை, உர இறக்குமதிக்கு ஆகும் அந்நிய செலாவணி செலவுடன் ஈடு செய்ய வேண்டும். (உர உற்பத்திக்கு தேவையான இயற்கை எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்துதான் நாம் அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம்) எல்லாவற்றுக்கும் மேலாக, எத்தனால் தயாரிக்க பயன்படும் கரும்பு மற்றும் அரிசி விளைச்சலுக்கு லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலமும், கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரும் செலவாகிறது என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

நிலமும், தண்ணீரும்தான் உண்மையான பிரச்சனை
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், E20 பெட்ரோலை எதிர்க்க முன்வைக்கப்படும் பொதுவான வாதம் மைலேஜும், சர்க்கரை விலையேற்றமும் தான். ஆனால், உண்மையான வாதமாக இருக்க வேண்டியது நிலமும், தண்ணீரும்தான்.
கடந்த ஜனவரி மாதம், தரவு விஞ்ஞானிகளான அன்னா ரிச்சி, பாப்லோ ரொசோடா ஆகியோரால் OurWorldinData.Org என்கிற வலைதளத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.
அதில், "எத்தனால் போன்ற பயோ-எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக 32 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 கோடி ஹெக்டேர்) தேவைப்படுகிறது" என அவர்கள் கூறியுள்ளனர். "இத்தனை கோடி நிலப்பரப்பின் மூலம் கிடைக்கப்பெறும் போய எரிசக்தியானது, உலகின் மின்சாரத் தேவையில் 2.24 சதவீதத்தைதான் நிவர்த்தி செய்கிறது" என அன்னா ரிச்சியும், பாப்லோ ரொசோடாவும் சொல்கின்றனர்.
எத்தனாலா - சூரிய மின்சக்தியா?
"இதே அளவுக்கான நிலப்பரப்பில் சோலார் பேனல்களை வைத்தால், அதன் மூலம் 32 டெராவட் மின்சாரத்தை பெற முடியும். இது, உலக நாடுகள் அனைத்தும் ஓராண்டு பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சமமான அளவு" எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இதனை அப்படியே வாகனப் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இன்னும் ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது, ஒரு ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி மூலம் மின்சார வாகனம் ஒன்று கடக்கும் தூரமும், 197 ஹெக்டேர் நிலத்தில் உள்ள பயிர்கள் மூலம் கிடைக்கும் எத்தனாலை கொண்டு ஒரு வாகனம் கடக்கும் தொலைவும் ஒன்றுதான் என்கிறது மின்சக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம்.

இதையும் கவனிக்க வேண்டும்
சூரிய மின்சக்தியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனம் மூலம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றாலும், ஒரு விஷயத்தை இதில் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பதற்கான சில முக்கிய கனிமங்கள், இந்தியாவில் மிக மிகக் குறைவு. ஆனால், இந்த கனிமங்கள் சீனாவில் அதிகம்.
தண்ணீர்.. தண்ணீர்..
அதே நேரத்தில், எத்தனால் உற்பத்தியானது இரண்டு முக்கிய சவால்களையும் நம் முன் வைக்கின்றன. ஒன்று, உணவுப் பாதுகாப்பு. மற்றொன்று, தண்ணீர் பிரச்சனை. எத்தனாலை தயாரிக்க பயன்படும் அரிசி மற்றும் கரும்பு பயிர்களுக்கு மிக மிக அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு சிறிய உதாரணம். ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 4,000 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 3,000 லிட்டர் தண்ணீரும் தேவை. ஒரு கிலோ மக்காச்சோளம் உற்பத்தி செய்ய 1,500 லிட்டர் தண்ணீர் வேண்டும்.
இதனால் உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய தண்ணீர், எத்தனால் உற்பத்திக்கு சென்றுவிடுகிறது.
அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்பு
அடுத்தது உணவு பாதுகாப்பு. எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளத்தின் தேவை அதிகரிக்கிறது. மக்காச்சோளம் பெருமளவு வளர்ப்புக் கோழி உள்ளிட்ட பறவைகளின் தீவனத்துக்கும், ஆடு, மாடு போன்ற கால்நடை தீவனத்துக்கும் பயன்படுகிறது. தற்போது இந்த மக்காச்சோளம், அதிக அளவு எத்தனால் தயாரிப்புக்கு செல்வதால் கால்நடை தீவனத்தின் விலை அதிகரிக்கும். இது அப்படியே கோழி, கால்நடைகளின் விலையிலும், முட்டை விலையிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேவைக்கு அதிகமாக தானிய இருப்பா?
ஏற்கனவே, இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவில் உணவு தானியங்கள், தேவைக்கு அதிகமாக இருக்கிறது என சொல்லப்படுவது, எல்லா மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கிறது என அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்களிடம் உணவு தானியங்களை வாங்குவதற்கான சக்தி குறைந்திருப்பதே, அவை உபரி ஆவதற்கான காரணமாக பார்க்க வேண்டும்.
இந்தியாவில் 10-க்கு 3 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கின்றன என ஈடிவி பாரத் அண்மையில் செய்தி வெளியிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்.
மறுபரிசீலனை அவசியம்
இத்தனை விஷயங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது, எத்தனால் உற்பத்தி மற்றும் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு ஆகியவை குறித்து நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமான ஒன்று எனத் தெரியவருகிறது. குறிப்பாக, 2025-26 பொருளாதாரக் கணக்கெடுப்பு ஒரு விஷயத்தை முக்கியமாக சுட்டிக்காட்டுகிறது.
"தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மக்களுக்கு அத்தியாவசியமானவை. ஆனால், அவை மாற்று எரிசக்தியின் முக்கிய தேவையாக மாறும் போது, உணவுப் பாதுகாப்பு சமநிலை பாதிக்கப்படும். அப்படி ஒரு சூழல் வந்தால், உணவு எண்ணெய்க்கு கூட பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்" என அதில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை நாம் எளிதில் கடந்து செல்லக் கூடாது.

