ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Published : April 8, 2026 at 12:25 PM IST
மகாராஷ்டிரா: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. இதனால் இறக்குமதி, ஏற்றுமதி பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்தன.
இதனால் இந்தியா போன்ற நாடுகளில் நிதி மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டிருந்தது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்தது. கடந்த மார்ச் 31- ஆம் தேதி ரூபாய் 95.21 என்ற வரலாற்று சரிவை எட்டியது.
இந்நிலையில், ஈரான் உடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக இன்று (ஏப்ரல் 08) அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது உலக நாடுகளை சற்று நிம்மதியடைய செய்துள்ளது. அமெரிக்க அதிபரின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, கச்சா எண்ணெய் விலை 20% சரிந்துள்ளது. 119 டாலராக இருந்த ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது 100 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது.
அதேபோல், கடந்த சில நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று (ஏப்ரல் 08) காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். கச்சா எண்ணெய் விலை சரிவால் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 2,720 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்துள்ளது. போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா அதிகரித்து ரூபாய் 92.56 ஆக உயர்ந்துள்ளது.
| இதையும் படிங்க: மீண்டும் மளமளவென குறைந்த தங்கம் விலை: சவரன் விலை என்ன தெரியுமா? |
இதனிடையே ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு இன்று (ஏப்ரல் 08) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்போது ரிசர்வ வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், "வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்காக ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக நீடிக்கும்; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; இந்தியாவில் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த 2025- ஆம் ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாதம் 0.50% குறைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

