2026-ல் உலகப் பொருளாதாரம் தள்ளாடினாலும் இந்தியாவி்ன் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் - ஐநா கணிப்பு
அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவுக்கு சந்தை வாய்ப்புகள் நிறைய உள்ளன என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

Published : January 9, 2026 at 12:52 PM IST
புதுடெல்லி: உலக பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்து வரும் இக்கட்டான சூழலிலும், 2026-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கணித்துள்ளது. தனிநபர் நுகர்வு மற்றும் வலுவான பொது முதலீடுகளின் பயனாக, அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் தனித்துவமான இந்த பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
'2026-ல் உலக பொருளாதார நிலவரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள்' குறித்த அறிக்கையை ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 2026-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்ட நிலையில், அது 6.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கணிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருந்தாலும் உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் நுகர்வு, வலுவான பொது முதலீடுகள், சமீபத்திய வரி சீரமைப்பு, கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதம் ஆகிய காரணிகளால் எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சி சாத்தியப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் அமெரிக்காவுடனான ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 18 சதவீதமாக இருப்பதால், இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியதன் தாக்கம் 2026-லும் தொடரும் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்புகள் என்ன? கோவை வந்த நாடாளுமன்ற நிலைக்குழு
மேலும், அமெரிக்காவின் அதிகப்படியான வரி விதிப்பால் மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களின் இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடரும். ஆனால் அமெரிக்க சந்தையின் இந்த நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன எனவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியீட்டுக்கு பின், ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அதிகாரி இங்கோ பிட்டர்லே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்த ஆண்டும் உலக அளவில் தெற்கு ஆசியா தான் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் பிராந்தியமாக தொடரும். இந்த பிராந்தியத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும். இதில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். உள்நாட்டு நுகர்வோரின் தேவை, முதலீடுகள், பணவீக்க விகிதம் குறைவு உள்ளிட்டவை இந்தியாவின் தனித்தன்மையான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக திகழும். அதே நேரம் 2026 இல் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும்" என்றார்.

