ETV Bharat / business

முடிச்சு விட்டுட்டீங்க போங்க... ஈரான் மீதான தாக்குதலால் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை கடந்த இரண்டு நாளில் மட்டும் ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்
கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 12:16 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை எப்போதும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பலவீனமான டாலர் மதிப்பு மற்றும் உலகளாவிய பதட்டங்கள், போர் சூழல் காரணமாக மாற்றத்தைக் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

அதன் எதிரொலியாக, நேற்று காலையில் சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து, ரூ. 1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதன்படி, வாரத்தின் இறுதி நாளாக நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15,550-க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கும் விற்பனையானது. அதேபோல, வெள்ளி விலை கிராம் ரூ. 320-க்கும், ஒரு கிலோ ரூ. 3,20,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இன்று காலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும், சவரனுக்கு ரூ. 1,800 அதிகரித்து ரூ. 1,26,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5-ம் கிலோவுக்கு ரூ. 5,000-ம் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதனால், நகை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை விடுமுறை என்பதால், சனிக்கிழமை விலைக்கே தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்படும். தற்போது, போர் சூழல் காரணமாக இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. மேலும், இதே நிலை நீடித்தால் விரைவில் தங்கம் விலை சவரன் ரூ.2 லட்சத்தை தொடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
மார்ச் 1ரூ.15,775ரூ.1,26,200
பிப்ரவரி 28ரூ.15,550ரூ.1,24,400
பிப்ரவரி 27ரூ.14,900ரூ.1,19,200
பிப்ரவரி 26ரூ.14,920ரூ.1,19,360
பிப்ரவரி 25ரூ.14,930ரூ.1,19,440
பிப்ரவரி 24ரூ.14,890ரூ.1,19,120
பிப்ரவரி 23ரூ. 14,860ரூ. 1,18,880
பிப்ரவரி 22ரூ.14,680ரூ.1,17,440
பிப்ரவரி 21ரூ.14,680ரூ.1,17,440
பிப்ரவரி 20ரூ.14,420ரூ.1,15,360

முன்னதாக, உக்ரைன் - ரஷ்யா போரும், இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்தது. தற்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதலால் உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும் நிலை எழுந்துள்ளது.