ETV Bharat / business

தமிழ்நாட்டின் மொத்த வருவாய் - செலவினம் எவ்வளவு? பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள்

மாநிலத்தின் சொந்த வருவாய் 2,54,575 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் திருத்த வரவு - செலவு திட்ட மொத்த வருவாய் மதிப்பீடுகளில் 72.73 சதவீதமாகும்.

பேரவையில் பட்ஜெட் உரையாற்றும் நிதியமைச்சர் மரிய வில்சன்
பேரவையில் பட்ஜெட் உரையாற்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 5, 2026 at 3:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் 3,50,027 கோடி ரூபாயாகவும், மொத்த செலவினம் 4,05,802 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தமது நீண்ட உரையில் நடப்பு நிதியாண்டுக்கான மாநிலத்தின் மொத்த வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

அவர் தமத உரையில், "குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் மட்டும் கவனம் செலுத்திய முந்தைய அரசை போல் அல்லாமல் நிவையான கொள்கைகள் மற்றும் தூய்மையான நல்லாட்சி வழங்குவதன் மூலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்று நமது அரசு நம்புகிறது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 2026-27 இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 2,29,579 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டிருந்தது. இதனை ஒப்பிடுகையில், திருத்த வரவு - செலவு திட்ட மதிப்பீட்டின்படி வரி வருவாய் 2,26,730 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் வணிக வரிகள் 1,56,176 கோடி ரூபாயும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் 35,109 கோடி ரூபாயும், மோட்டார் வாகன வரி 14,861 கோடி ரூபாயும், மாநில கலால் வரி 14,164 கோடி ரூபாயும் அடங்கும்.

மாநிலத்தின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை ஏற்கெனவே குறிப்பிட்டதற்கு இணங்க, 2025 -26 நிகியாண்டின் திருத்த மதிப்பீட்டை விட 2026-27 -ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின்படி மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 9.78 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 2025-26 ம் ஆண்டின் திருத்த மதி்ப்பீட்டான 26,265 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 2026-27 -ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் 27,704 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே திருத்த வரவு- செலவு திட்டத்தில் 27,835 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மாநிலத்தின் சொந்த வருவாய்கள் 2,54,575 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் திருத்த வரவு - செலவு திட்ட மொத்த வருவாய் மதிப்பீடுகளில் 72.73 சதவீதமாகும்.

ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் உகவி மானியங்கள் இடைக்கால பட்ஜெட்டில் 2026-27 இல் 24,762 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக, வளர்ச்சி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் எனும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் 60, 40 பங்கீட்டின்படி 7,586 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையான 3,461 கோடி ரூபாயும் 2026-27 திருத்தப்பட்ட வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 32,922 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய வரிகளில் மாநிலத்தின் பங்கு திருத்த மதிப்பீடுகள் 2025-26 இல் 56,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் வரவு - செலவு திட்டத்தில் இடம் பெற்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் இது இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27 இல் 62,531 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.

மொத்தத்தில் 2025-26 -ம் ஆண்டுக்கான திருத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 3,09,698 கோடி ரூபாயாகவும், 2026-27- ம் ஆண்டின் இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் 3,44,575 கோடி ரூபாயாகவும் கணிக்கப்பட்டிருந்த மொத்த வருவாய் வரவுகள் 2026-27 திருத்த வரவு -செலவு திட்ட மதிப்பீடுகளில் 3,50,027 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைகால பட்ஜெட் மதிப்பீடுகளை விட 5,450 கோடி ரூபாய் அதிகமாகும்.

செலவினங்களை பொறுத்தவரை மொத்த வருவாய் செலவினம் இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்த 3,93,292 கோடி ரூபாயிலிருந்து திருத்தப்பட்ட வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் 4,05,802 கோடி ரூபாயாக உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களான விவசாய பயிர் கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆகியவற்றுக்கான கட்டாய நிதி ஒதுக்கீடுகள் அதிகரித்ததால் மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்கள் உயர்ந்துள்ளன.

2026--27 இடைக்கால பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் 59,562 கோடி ரூபாயாக கணிக்கப்பட்ட ஒட்டுமொத்த மூலதன செலவினம், திருத்தப்பட்ட பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் 56,985 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் மொத்த மூலதன ஒதுக்கீடு திருத்த வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் 60,060 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வருவாய் பற்றாக்குறை 48,696 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இதுவே இந்த நிதியாண்டின் திருத்த பட்ஜெட்டில் 55,775 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த நிதிப்பற்றாகுறை 1,21,949 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது 1,21,819 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு நிதி பொறுப்பு சட்டம் 2003 -இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் இருக்கும்.

இதே போன்று, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவை கடன் பொறுப்புகள் 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்த 10,99,458 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளில் 10,98,768 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பெறப்பட்ட 9,523 கோடி ரூபாயும் அடங்கும்.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஜிஎஸ்டி நிலுவை பொறுப்புகள் விகிதம் இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்த 27.03 சதவீதத்தை ஒப்பிடுகையில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளில் 27.01 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.