10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள்: நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
16 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும் என்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : August 5, 2026 at 2:18 PM IST
சென்னை: 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநில நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 05) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பால்வளத்துறை
நிதிநிலை அறிக்கையின் பால்வளத்துறைக்கான அறிவிப்புகளில், பால் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும். இதற்காக, திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/xOg5m5lB5S
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
மேலும், இந்த திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு 4,880 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை
தொடர்ந்து, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கான நிதிநிலை அறிவிப்புகளில், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள கைவினைஞர் சமூகங்கள் மற்றும் திறமைவாய்ந்த மாணவர்களுக்கு, நிதிச் சிக்கல்கள் மற்றும் சிறப்புக் கல்வி வாய்ப்புகளை பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றால் போதிய வாய்ப்பு கிடைக்காமல், தேசிய அளவிலான முதன்மை வடிவமைப்பு நிறுவனங்களை அணுகுவதில் பல இடர்பாடுகளையும் எதிர்கொள்கின்றனர்.
இந்த இடைவெளிகளை சரிசெய்யும் நோக்கில், தொழில் மற்றும் கல்வித்துறையினரின் தீவிர பங்களிப்புடன், மாநில முக்கியத்தும் வாய்ந்த நிறுவனமாக “தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம்” அமைக்கப்படும். 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்நிறுவனத்தை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு விளங்கினாலும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறைந்த அளவிலான விழிப்புணர்வு, சர்வதேச அனுபவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமாக ஜவுளி உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/hQEwkUSfyL
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
இதனைத் தொடர்ந்து, இந்த இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ”தொழில்முனைவோர்களுக்கான தொழில்நுட்ப ஜவுளி மாற்றத்திற்கான திட்டம்” தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆகியோர் தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கு மாறுவதற்குத் தேவையான பன்னாட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம், சந்தை நுண்ணறிவு, புத்தாக்க ஆதரவு மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படும் எனவும் நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/uQmT1R3QIf
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
இதையடுத்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் ‘தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம்’ நிறுவப்படும். தொடர்ந்து, பதநீர் பதப்படுத்துதல், பனங்கருப்பட்டி உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பனைப் பொருட்களின் ஏற்றுமதி போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/hwyXZJ0poD
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
மேலும், திருப்பூரில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமைவழி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், இதற்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் “திருப்பூர் டெக்ஸ்ட்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்” அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு மொத்தமாக 1,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

