ETV Bharat / business

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ரூ.150 கோடியில் இளைஞர்களுக்கு ’வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்’

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களின் மூலம் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை பிரநிதித்துவப் படம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை பிரநிதித்துவப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 5, 2026 at 3:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: ரூ.150 கோடியில் ’வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்’ மூலம் நடப்பாண்டில் 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் தொழில்துறை தேவைக்கேற்ப திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், அண்ணா மற்றும் எம்ஜிஆரை சுட்டிக் காட்டியும் பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், ”முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சொன்னதை மட்டுமின்றி, சொல்லாதவற்றையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. தவெகவின் வெற்றி என்பது ஒரு கட்சிக்கான வெற்றியாக இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் வெற்றியாக உள்ளது. மேலும் இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கை உண்மையான தொலைநோக்கு திட்டத்தை வடிவமைத்துக் காட்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், “தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத வகையில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என கூறினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்புகள்

  • வாகன மெக்கானிக்குகள் மற்றும் வாகனப் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் பராமரிப்பு பயிற்சி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டு காலத்தில் 12,500 வாகன மெக்கானிக்குகள் உட்பட மொத்தம் 22,500 நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர். இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் (AI and ML) என்ற புதிய தொழிற்பிரிவு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். இத்தொழிற்பிரிவு, ஆண்டுக்கு 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் வீதம், 5 ஆண்டுகளில் மொத்தம் 50 தொழிற்பயிற்சி நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும்.
  • 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் 90 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் நிறுவப்படும். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களின் மூலம் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை நடத்த 3.38 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ்நாட்டு இளைஞர்களை வேலைவாய்ப்பிற்கு தகுதி உடையவர்களாக உருவாக்குவதுடன் அவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தையும் வளர்க்கும் நோக்கில், இந்த அரசு ’வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தை' அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு இலட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் தொழில்துறை தேவைக்கேற்ப திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இப்பணியிடப் பயிற்சி காலத்தில் பட்டதாரிகளுக்கு தொழிற்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதையும் படிங்க: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் - ‘அண்ணனின் சீருக்கு’ பட்ஜெட்டில் ரூ. 812 கோடி ஒதுக்கீடு

செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம்

  • தொழில்நுட்பப் புரட்சியின் முதன்மைப் பயனாளியாக நமது இளைஞர்கள் திகழ்வதை உறுதி செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம் (AI Industry Development Program) தொடங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் உயர் கல்வியின் பல்வேறு நிலைகளுக்கேற்பத் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்களை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.
  • 2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள். பாலிடெக்னிக் கல்லூரிகள், மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 இலட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளித்து, உலகத் தரத்திலான, ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க தவெக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தமிழ்நாடு பள்ளித் திட்டம் (TN SPARK) தற்போதுள்ள 5,000 அரசுப் பள்ளிகளில் இருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு 2026- 27ஆம் ஆண்டில் விரிவுப்படுத்தப்படும்.
  • புதிதாக மறுசீரமைக்கப்பட்ட மூன்று நிலைகளைக் கொண்ட கட்டமைப்பின் கீழ். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த அடிப்படைப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலை அளவிலான பயிற்சியும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு விருப்பப் பாடங்களும் வழங்கப்படும்.
  • இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நதிியமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.