தொழில் அதிபர் சுபாஷ் சந்திராவும் ரூ.22,006 கோடி சர்ச்சையும் - விரிவான பார்வை
ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடன் தொகைக்கு வெறும் ரூ. 6.25 கோடி மட்டுமே வசூலிப்பது என்பது 0.028% மீட்பு மட்டுமே. இதுவே மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

By R Srinivasan
Published : September 3, 2026 at 8:02 AM IST
|Updated : September 3, 2026 at 8:10 AM IST
இந்த வழக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. ஜீ மற்றும் எஸ்செல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா தொடர்புடைய விவேக் இன்ஃப்ராகான் நிறுவனத்திற்கு இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.170 கோடி கடன் வழங்கியது. அதன் பிறகு விவேக் இன்ஃப்ராகான் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்பட்டது. இதனால் கடன் தொகை ரூ. 726 கோடியாக உயர்ந்தது.
இந்த சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, சுபாஷ் சந்திரா கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு தனிநபர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
இந்த தனிநபர் உத்தரவாதத்தைப் பயன்படுத்தி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாபுல்ஸ் நிறுவனம், சுபாஷ் சந்திராவிடம் சுமார் ரூ.178.79 கோடியைக் கேட்டது. ஆனால், பணம் கிடைக்காததால் அவருக்கு எதிராக திவால் நடவடிக்கைகளைத் தொடங்கக் கோரி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) இந்தியா புல்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, என்சிஎல்டி 2022-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தீர்வளிக்கும் நிபுணரையும் நியமித்தது.
அசல் தொகை ரூ.170 கோடி, ரூ.22,006 கோடியாக உயர்ந்தது எப்படி?
சுபாஷ் சந்திரா, இந்த முழுத் தொகையையும் அவரே பெறவில்லை. எஸ்செல் குழுமம் மற்றும் சுபாஷ் சந்திராவுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்காக அவர் பல தனிநபர் உத்தரவாதங்களை வழங்கியிருந்தார்.
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, எஸ்செல் குழும நிறுவனங்களுக்கு கடன் அளித்த பிற கடன் வழங்கும் நிறுவனங்களும், இந்தியாபுல்ஸ் திவால் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சுபாஷ் சந்திராவின் தனிநபர் உத்தரவாதம் காரணமாக, பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்கள் கோரிய மொத்த தொகை ரூ.22,006 கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது.
இதனால், இந்தியாபுல்ஸ் தாக்கல் செய்த மனு, இறுதியாக ஒரு கூட்டுத் தனிநபர் உத்தரவாத வழக்காக மாறியது.
சுபாஷ் சந்திராவின் வாதம் என்ன?
தாம் செலுத்த வேண்டிய தொகை ரூ.22,006 கோடி என்று கூறுவது தவறானது என்கிறார் சுபாஷ் சந்திரா. தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் நியமித்த தீர்வளிக்கும் நிபுணர் சில கோரிக்கைகளை நிராகரித்ததால், உண்மையான கடன் தொகை ரூ.21,696 கோடிதான் என்று அவர் கூறுகிறார். இவற்றில் முதன்மையான சில நிறுவனங்கள் ரூ.1,494 கோடி செலுத்த முன்வந்தன.
மேலும், கடன் கொடுத்த கோரிய தொகை ரூ.3,992 கோடி மட்டுமே என்றும், அதில், ரூ.620 கோடி ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.
கடனைத் திரும்பச் செலுத்தும் திட்டம்
முதலாவதாக, சுபாஷ் சந்திரா தனது தனிப்பட்ட நிகர மதிப்பில் இருந்து ரூ. 6.25 கோடி, திவால் நடைமுறைச் செலவுகளுக்காக ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ.6.5 கோடியை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இரண்டாவதாக, கடன் பெற்ற முதன்மை நிறுவனங்கள் சுமார் ரூ.1,494 கோடியைச் திருப்பிச் செலுத்துவது என்பது தனித் திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
சுபாஷ் சந்திரா முன்மொழிந்த திட்டத்தை ஏற்பதா? நிராகரிப்பதா? என கடன் கொடுத்த நிறுவனங்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், 77.48 % நிறுவனங்கள் ஆதரவாகவும், 18.42% நிறுவனங்கள் எதிராகவும் வாக்களித்தன. மேலும், 4.10% சதவீத நிறுவனங்கள், குறிப்பாக பரஸ்பர நிதி அறக்கட்டளைகள் நடுநிலை வகித்தன.
நடுநிலை வகித்த வாக்குகள் நீக்கப்பட்ட பிறகு, இறுதி முடிவாக 80.814% நிறுவனங்கள் ஆதரவாகவும், 19.186% நிறுவனங்கள் எதிராகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டது.
இது ஏன் பெரும் சர்ச்சையானது?
இந்த வாக்கெடுப்பைச் சுற்றி மூன்று முக்கிய சர்ச்சைகள் எழுந்தன:
முதலாவதாக, ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடன் தொகைக்கு வெறும் ரூ. 6.25 கோடி மட்டுமே வசூலிப்பது என்பது 0.028% மீட்பு மட்டுமே. இதுவே மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.
இரண்டாவது, சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு ஆதரவாக கிடைத்த பெரும்பாலான வாக்குகள், அவர் தொடர்புடைய நிறுவனங்கள் செலுத்தியவை என்பதால், அந்த நிறுவனங்கள் வாக்களிக்கவே அனுமதித்திருக்க கூடாது என்று, எதிராக வாக்களித்த நிறுவனங்கள் வாதிட்டன.
ஆதரவாக வாக்களித்த நிறுவனங்கள்
வீணா இன்வெஸ்ட்மென்ட்ஸ், டைரக்ட் மீடியா டிஸ்ட்ரிபியூஷன் வென்ச்சர்ஸ், வேர்ல்ட் கிரெஸ்ட் அட்வைசர்ஸ், லெமனேட் கேபிட்டல் அட்வைசர்ஸ், கார்ப்கால் கேபிட்டல் அட்வைசர்ஸ் போன்ற நிறுவனங்கள் சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த நிறுவனங்கள் மட்டுமே 61.78% வாக்குகளை செலுத்தி உள்ளன.
மூன்றாவதாக, சுபாஷ் சந்திரா தனது நிகர மதிப்பு குறித்த அளித்த சான்றிதழ் சர்ச்சையாகி உள்ளது. கடன் வழங்கப்பட்ட 2017, 2018-ஆம் ஆண்டுகளில் அவருடைய நிகர மதிப்பு முறையே ரூ. 45,888 கோடி மற்றும் ரூ. 40,562 கோடி என்று சில வங்கிகள் சான்றிதழ்களை சமர்ப்பித்தன. ஆனால் தற்போது அவர் மிகக்குறைந்த நிகர மதிப்பை மட்டுமே காட்டியுள்ளார்.
சுபாஷ் சந்திராவின் வாதம்
கடன் பெற்றதாக கூறப்படும் நிறுவனங்கள் 2008-ஆம் ஆண்டிலேயே குடும்ப வர்த்தக தீர்வுன் கீழ் தனது சகோதரர் ஜவஹர் கோயலுக்கு மாற்றப்பட்டுவிட்டன என்றும், அவை தனக்கு தொடர்புடைய நிறுவனங்கள் அல்ல என்றும் சுபாஷ் சந்திரா வாதிட்டார்.
முந்தைய நிகர மதிப்பு சான்றிதழ்கள் தனது குழுமத்தின் நிறுவனஙத்தின் பங்குகளின் மதிப்பைக் குறிப்பவை என்றும், தனது தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், கடந்த 2016-இல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சொத்து பிரகடனத்தில் தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.39.08 கோடி மட்டுமே என்று குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் என்ன செய்தது?
இந்த வழக்கை விசாரிக்க, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அமர்வை நியமித்தது. அதில், தொழில்நுட்ப உறுப்பினர் ரீனா சின்ஹா பூரி, திட்டத்தை நிராகரித்தார். நீதித்துறை உறுப்பினர் அசோக் குமார் பரத்வாஜ், இதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால் வங்கிகள் தங்கள் பணத்தை திரும்ப பெறும் முயற்சிகளைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
மூன்றாவது உறுப்பினரின் தீர்ப்பு
இரு உறுப்பினர்களிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், வழக்கு மூன்றாவது உறுப்பினர் நீலேஷ் சர்மாவிடம் மாற்றப்பட்டது. அவர், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, திவால் சட்டப்படி, இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
சர்ச்சை உருவானது
இவ்வளவு பெரிய தொகைக்கு மிகக்குறைந்த தொகையை வசூலிக்கலாம் என்று வழங்கப்பட்ட இந்த உத்தரவு ஊடகங்களில் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான அனுபிந்தர் சிங் கிரீவா, இந்த விவகாரத்தை ஆராய 5 உறுப்பினர்களைக் கொண்ட அமர்வை நியமித்தார்.
முதல் கட்டமாக, அந்த 5 பேர் கொண்ட அமர்வு, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் மூன்று உறுப்பினர்களும் தெளிவான, பெரும்பான்மையான முடிவை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. எனவே, இதுதொடர்பாக, குறைந்த தொகையை வசூலிக்கலாம் என்று ஆகஸ்ட் 25ஆம் தேதி மூன்றாவது உறுப்பினர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 23 அன்று நடைபெற உள்ளது.
கதை இன்னும் முடியவில்லை
வழக்கு இப்போது இரண்டு திசைகளில் பயணிக்கிறது. ஒன்று, மூன்றாவது உறுப்பினர் நீலேஷ் சர்மா ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கடன் வழங்கிய நிறுவனங்கள், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இரண்டாவது, நீலேஷ் சர்மா உத்தரவை 5 பேர் கொண்ட அமர்வு மறுஆய்வு செய்ய உள்ளது.

