வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை - கச்சா எண்ணெய் விலையும் அதிகரிப்பு
கடல் வணிகப் பாதையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.


Published : March 2, 2026 at 10:10 AM IST
மும்பை: பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் சுமார் 1,000 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு, ஈரான் ராணுவமும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகளாவிய வர்த்தக சந்தைகளில் அசாதாரண சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. போர் மூண்டால் இந்த சூழல் ஏற்படும் என முன்னதாகவே பொருளாதார வல்லுநர்களும் கணித்திருந்தனர்.
அதேபோல, இன்றைய வர்த்தக நாளில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் பெரும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,187 புள்ளிகள் சரிந்து 80,100 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 341 புள்ளிகளை இழந்து 24,837 ஆகவும் வர்த்தகமானது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்டெர்குளோப் ஏவிஐ (-6.42%), லார்சன் (-4.87), அதானி போர்ட்ஸ் (-3.25), மாருதி சுசூகி (-3.06), டிஎம்பிவி (-3.06) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
கடுமையான இந்த நெருக்கடி சூழலிலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையைப் பெற்று பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (2.18%), ஹிண்டால்கோ (1.75%), ஓ.என்.ஜி.சி (1.23%), சன் ஃபார்மா (0.94), ஐடிசி (0.48%) ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தை பதிவு செய்தன.
பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகளும், இன்றைய தினத்தில் கடும் சரிவை பதிவு செய்துள்ளன. அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, ஆசிய நாடுகள் பெருமளவில் நம்பி இருக்கின்றன. குறிப்பாக, ஈரான் கடற்பரப்பை தாண்டி தான் இந்த கச்சா எண்ணெய் ஆசிய நாடுகளுக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்த சூழலில், ஈரான் மீது தாக்குதல் தொடர்வதால், கடல் வணிகப் பாதையை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனால், ஆசிய சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மறுபுறம், கச்சா எண்ணெயின் விலை உலக சந்தைகளில் அதிகரித்து காணப்படுகிறது. அதன் தாக்கம் இந்திய பொருள் வணிக சந்தையிலும் (கமாடிட்டி) எதிரொலித்தது. வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 6,092 என்ற புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது.
ஆனால், இன்று 6,210 புள்ளிகளுடன் தனது வர்த்தகத்தை கச்சா எண்ணெய் தொடங்கியுள்ளது. தொடர்ந்து சுமார் 380 புள்ளிகள் உயர்ந்து கச்சா எண்ணெய் வர்த்தகமாகிறது.

