ETV Bharat / business

அச்சுறுத்தும் உலக அரசியல்; 1% இழப்புடன் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் பிற நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 5:25 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 961 புள்ளிகளை இழந்து 81,287 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா எந்நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. இது, உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்ற கவலை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்திய சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை அதிகளவில் திரும்பப் பெற்று வருகின்றனர். இது சந்தையின் போக்கை சரிவின் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதைத்தவிர, சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் பிற நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் (ETV Bharat)

அந்த வகையில், இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 961 புள்ளிகள் (1.17%) சரிந்து 81,287 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சுமார் 317 புள்ளிகளை (1.25%) இழந்து 25,178 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

இந்திய பங்குச்சந்தையில் இன்று சரிவை சந்தித்தப் பங்குகளின் பட்டியல்
இந்திய பங்குச்சந்தையில் இன்று சரிவை சந்தித்தப் பங்குகளின் பட்டியல் (ETV Bharat)

இந்திய பங்குச் சந்தைப் பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கும் சன் பார்மா, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டிகோ ஏவியேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இன்று பெரும் சரிவைச் சந்தித்தன.

இந்திய பங்குச்சந்தையில் இன்று வளர்ச்சி கண்ட பங்குகளின் பட்டியல்
இந்திய பங்குச்சந்தையில் இன்று வளர்ச்சி கண்ட பங்குகளின் பட்டியல் (ETV Bharat)

எனினும், பாதுகாப்பான முதலீடு எனக் கருதப்படும் நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகள் சற்று ஏற்றம் கண்டு, முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது. ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று ஓரளவுக்கு லாபத்தில் வர்த்தகமாகின.

இதையும் படிங்க: வெறும் ரூ.80 குறைந்த தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

தென் கொரியாவின் பங்குச்சந்தை குறியீடான கோஸ்பி (Kospi), இன்று 1% சரிவை சந்தித்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஜப்பானின் நிக்கேய் 225 (Nikkei 225), சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் (Hang Seng) ஆகிய குறியீடுகள் இன்றைய வர்த்தக நாள் முடிவில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் சரிவிலேயே முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.26 விழுக்காடு உயர்ந்து, ஒரு பீப்பாய் 71.64 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.