ETV Bharat / business

வெள்ளி விலை உயர்வால் அச்சப்பட வேண்டாம் - முதலீடு செய்ய உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

இனிவரும் காலங்களிலும் வெள்ளியின் விலை உயர்வை தடுக்க முடியாது என சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

வெள்ளிப் பொருட்கள்
வெள்ளிப் பொருட்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 16, 2025 at 6:12 PM IST

|

Updated : December 16, 2025 at 7:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சேலம்: வெள்ளி விலை உயர்வை கண்டு அச்சப்படாமல், அதனை எதிர்கால முதலீடாக பயன்படுத்திக் கொள்ளுமாறு, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை, நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை கடந்த நிலையில், வெள்ளி ஒரு கிலோ 2 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி கொலுசுகள்
வெள்ளி கொலுசுகள் (ETV Bharat Tamil Nadu)

வெள்ளியில் முதலீடு

இதனால், தங்கத்திற்கு மாற்றாக வெள்ளி நகை உற்பத்தியும், அதன் விற்பனையும் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளியின் விற்பனை விலைக்கும், தற்போது விற்பனையாகும் வெள்ளியின் விலைக்கும் இடையே 40 விழுக்காடு வேறுபாடு அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.

தங்கத்தைப் போன்று, வெள்ளியும் விலை உயர்ந்து வருவதால், பொதுமக்களிடையே குழப்பமும் ஏற்பட்டுள்ளது. வெள்ளியில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதும் பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

வெள்ளி நகைகள் செய்யும் உற்பத்தியாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜ் கூறுகையில், “இனி வரும் காலங்களிலும் வெள்ளியின் விலை உயர்வை தடுக்க முடியாது. வெள்ளி விலை உயர்வதை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. தங்களால் இயன்றவரை வெள்ளியை கட்டியாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பழைய வெள்ளி ஆபரண பொருட்களை கடைகளில் கொடுத்து, புதிய வெள்ளி பொருட்களை வாங்கும் போது சில ஆயிரம் ரூபாய் அவற்றோடு சேர்த்து கொடுத்து வாங்கும் வழக்கம் தான் பொதுமக்கள் மத்தியில் அதிகமுள்ளது.

வெள்ளி வைத்து வங்கியில் கடன்

அதற்கு பதிலாக, பழைய வெள்ளி பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு, புதிய வெள்ளிப் பொருட்களை தற்போதைய விலையில் வாங்கி பயன்படுத்தும் மனநிலைக்கு மக்கள் வரவேண்டும். ஏனென்றால் அது எதிர்கால முதலீடு.

வெள்ளி நகைகள் செய்யும் உற்பத்தியாளர்கள்
வெள்ளி நகைகள் செய்யும் உற்பத்தியாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

அவ்வாறு வெள்ளி பொருட்களில் முதலீடு செய்தால், தங்கத்தை போன்றே சில மாதங்களில் அதிக லாபத்தை ஈட்ட முடியும். வெள்ளி விலை உயர்ந்து வருவதால் ரிசர்வ் வங்கியும், வங்கிகளில் தங்கத்தை போன்றே வெள்ளிப் பொருட்களை அடகு வைத்து பணம் பெற அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியையும் ஒவ்வொரு வங்கிக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ளது.

அடுத்த ஆண்டில் இது நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி விலை உயர்வு முதலீடு செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பண வரவை கொடுக்கும் என்ற போதும், தற்போதைய விலை உயர்வு வெள்ளி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தியும் உள்ளது.

வெள்ளியின் எதிர்காலம்

வெள்ளியில் பொதுமக்கள் முதலீடு செய்யத் தொடங்கினால் வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இனிவரும் காலங்களிலும் வெள்ளியில் பயன்பாடு அதிகரிக்க தான் செய்யும். ஏனெனில், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவிலான வெள்ளியை வாங்கி இருப்பு வைத்துள்ளன.

இதையும் படிங்க: ரயில்வே பணி வேண்டுமா? உங்களுக்கு உதவ காத்திருக்கும் ‘ரயில்வே கணிதம்’ புத்தகம்

இந்தியாவைப் பொறுத்தவரை பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களில், வெள்ளியின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருவது வாடிக்கையாக இருக்கிறது. இருந்தபோதிலும் வெள்ளியின் விலை ஏற்றம் தொடரத்தான் செய்யும்,” என்று தெரிவித்தார்.

Last Updated : December 16, 2025 at 7:08 PM IST