ETV Bharat / business

ஒரு ஏக்கர் ரூ.269 கோடி| மும்பையை ஓரங்கட்டிய ஹைதராபாத்!

இரு வார ஏலங்கள் மூலம் மட்டுமே 10.63 ஏக்கர் நிலத்திலிருந்து தெலங்கானா அரசுக்கு ரூ. 2,833.22 கோடி ஒட்டுமொத்த வருவாய் கிடைத்துள்ளது.

ராய்துர்கம்
ராய்துர்கம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 9:01 AM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தின் தகவல் தொழில்நுட்ப பகுதியான ராய்துர்கத்தில் ஒரு ஏக்கர் நிலம் ரூ. 269 கோடிக்கு ஏலம் போய் இந்திய ரியல் எஸ்டேட் துறையையே அதிர வைத்துள்ளது.

தெலங்கானா தொழில் மற்றும் உள்கட்டமைப்பு கழகம் (TGIIC) நடத்திய இந்த மின்னணு ஏலம், நாட்டின் நில மதிப்பு வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ராய்துர்கம் பான்மகத பகுதியில் (சர்வே எண்: 83/1) உள்ள 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'Plot P2' என்ற நிலம் தான் மெகா ஏலத்திற்கு வந்தது. கடுமையான போட்டிக்கு இடையே, ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான 'வம்சிராம் பில்டர்ஸ்' ஏக்கருக்கு ரூ. 269 கோடி என்ற விலையை கொடுத்து இந்த நிலத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஒரு நிலத்தின் விற்பனை மூலம் மட்டுமே தெலங்கானா அரசுக்கு ரூ. 1,447.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ராய்துர்கம் பகுதியில் நிலத்தின் மதிப்பு தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த வாரம் இதே பகுதியில் உள்ள 5.25 ஏக்கர் நிலம் ஒரு ஏக்கர் ரூ. 264 கோடி வீதம் மொத்தம் ரூ. 1,386 கோடிக்கு ஏலம் போனது. ஆனால், இந்த வாரம் முந்தைய சாதனையை வெறும் 7 நாட்களில் முறியடித்து, தற்போதைய ஏலம் ஏக்கருக்கு ரூ. 5 கோடி கூடுதலாக (ரூ. 269 கோடி) விற்பனையாகியுள்ளது. இந்த இரு வார ஏலங்கள் மூலம் மட்டுமே 10.63 ஏக்கர் நிலத்திலிருந்து தெலங்கானா அரசுக்கு ரூ. 2,833.22 கோடி ஒட்டுமொத்த வருவாய் கிடைத்துள்ளது.

ராயதுர்கம்
ராயதுர்கம் (ETV Bharat)

இந்த பகுதியில் அரசு நிர்ணயித்த ஆரம்ப விலையான ரூ. 175 கோடியை விட 52.3% கூடுதல் பிரீமியம் விலைக்கு இந்த நிலம் ஏலம் போயுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவது, இந்த நிலத்தில் கட்டுப்படும் கட்டிடங்களின் உயரத்திற்கு எவ்வித உச்ச வரம்பும் கிடையாது. இரண்டாவது, ஹைதராபாத்தின் பிரதான ஐடி காரிடாரான நாலேட்ஜ் சிட்டி மற்றும் கச்சிபௌலி பகுதிகளுக்கு மிக அருகில் இந்த நிலம் அமைந்துள்ளது. மூன்றாவதாக இந்த நிலத்தை வணிக வளாகங்கள், மென்பொருள் பூங்காக்கள் அல்லது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தொடர்பாக பேசிய தெலங்கான தொழில் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஷாங்கா, "இந்த இமாலய ஏல வெற்றி, ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவின் அசுர பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.