ETV Bharat / business

ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை விரிவுபடுத்த அனுமதி வேண்டும் - கோரிக்கை வைக்கும் ஓ.என்.ஜி.சி மேலாளர்

புதிய கிணறுகள் தோண்டுவது தமிழகத்தில் நிறுத்தப்பட்டதால், மாநிலத்திற்கு தேவையான எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதாக ஓ.என்.ஜி.சி காவிரி அசெட் மேலாளர் கே.வி. இளங்கோ தெரிவித்துள்ளார்.

ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளர் கே.வி. இளங்கோ
ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளர் கே.வி. இளங்கோ (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 12:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறு பணிகளை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால், மாநிலத்திற்குத் தேவையான எரிவாயுவை ஓ.என்.ஜி.சி நிறுவனமே அளிக்க முடியும் என அந்நிறுவனத்தின் காவிரி அசெட் மேலாளர் கே.வி. இளங்கோ தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளி மைதானத்தில் ஓ.என்.ஜி.சி (ONGC) காவேரி அசட் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் 8-ஆவது தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவை காவிரி அசெட் மேலாளர் கே.வி. இளங்கோ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”1956இல் தொடங்கப்பட்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் இன்று இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் 15 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 1980இல் ஓஎன்ஜிசி வந்தது.

1987-ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டா பகுதிகளிலும், 2002-ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரத்திலும் செயல்பட தொடங்கியது. தமிழகத்தில் தற்போது காரைக்காலை தலைமையிடமாக கொண்டு, காரைக்கால், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், இராமநாதபுரம் என 9 மாவட்டங்களில் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.

விவசாய நிலங்கள்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் 760 எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டதில், தற்போது 400 கிணறுகள் எண்ணெய் எடுத்து முடிக்கப்பட்டு அவை சம்மந்தப்பட்ட விவசாயிகளிடமே திரும்பி வழங்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதை தவிர, பெட்ரோ கெமிக்கல்ஸ், கிரீன் எனர்ஜி, ரீபைனரி, என எல்லாவிதமான தலங்களிலும் பயணிக்கிறது.

4,220 சதுர கி.மீ பெட்ரோல் சுரங்கம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், நாங்கள் அதில் 0.03 சதவீதம் அளவிற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். அதாவது அது 17 சதுர கி.மீ அளவுதான். தற்போது எங்களிடம் 4,500 விவசாயிகளிடமிருந்து குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட 2500 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது” எனக் கூறினார்.

குழாய் வாயிலாக எரிவாயு

மேலும், “2020-ஆம் ஆண்டு டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, கிணறு தோண்டும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் கிணறுகள் மூலம் சேகரிக்கும் கச்சா எண்ணெய் சென்னை மணலி சுத்தகரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதே போன்று வாயுவை அதிக அளவில் ஸ்பிக் ஆலைக்கு வழங்குகிறோம். ஸ்பிக் ஆலைக்கு தேவையான வாயுவில் 75 சதவீதத்தை நாங்கள் வழங்குகிறோம்.

ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை விரிவுபடுத்த அனுமதி வேண்டும் - கோரிக்கை வைக்கும் ஓ.என்.ஜி.சி மேலாளர் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வாவின் விலை கிடுகிடுவென உயர்வு - அல்வா பிரியர்கள் கடும் அதிர்ச்சி

2023-ம் ஆண்டு தமிழக அரசின் கொள்கை முடிவின்படி, வீடுகள் தோறும் குடிநீரை போல, குழாய் வாயிலாக எரிவாயு வழங்க திட்டம் அமல்படுத்த ஏதுவாக ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை 18 மாவட்டங்கள் வழியாக குழாய் வாயிலாக எரிவாயு கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020-க்கு பிறகு புதிய கிணறுகள் தோண்டுவது தமிழகத்தில் நிறுத்தப்பட்டதால் 34 லட்சத்தில் இருந்து 26 லட்சம் ஸ்டேன்டடெட் மீட்டராக எரிவாயுவும், 1090 டன்னாக இருந்த எண்ணெய் எடுப்பு 550 டன்னாக குறைந்தது. தமிழகத்தில் 2025-26ல் பயன்படுத்தப்பட்ட 1.5 பில்லியன் ஸ்டேன்டடெட் மீட்டர் எரிவாயு என்பதில் 0.8 பில்லியன் ஸ்டேன்டடெட் மீட்டர் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியாகும்.

ராமநாதபுரம் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறாது என்பதால் அங்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளை விரிவுபடுத்த தமிழக அரசு அனுமதி அளித்தால், தமிழகத்திற்கு தேவையை பெரும்பான்மையை ஓ.என்.ஜி.சி நிறுவனமே அளிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

பேட்டியின்போது அவருடன், தலைமை பொது மேலாளர்கள் எச்.ஆர். கிரிராஜ் திம்மன், கோகய், சரவணன், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.