ETV Bharat / business

கிலோவுக்கு ரூ.10,000: தங்கத்துக்கு போட்டியாளராக மாறிய மதுரை மல்லி!

கடும் பனிப்பொழிவால் மதுரை மல்லியின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் மதுரை மல்லிகைப்பூ
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் மதுரை மல்லிகைப்பூ (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 1:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கிலோ மல்லியின் விலை ரூ.10,000 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். வாடிப்பட்டி, பாலமேடு, சோழவந்தான், மேலூர், கொட்டாம்பட்டி, வலையங்குளம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கல்லுப்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

விற்பனைக்காக குறைந்த அளவில் வைக்கப்பட்டிருக்கும் மதுரை மல்லிகைப்பூ
விற்பனைக்காக குறைந்த அளவில் வைக்கப்பட்டிருக்கும் மதுரை மல்லிகைப்பூ (ETV Bharat)

குறிப்பாக, இந்த பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு இந்தியா முழுவதும் மட்டுமன்றி, அண்டை நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், பஞ்சு போன்ற இட்லியைக் கூட மதுரை மல்லிக்கு இணையாக குறிப்பிடுவதுண்டு.

வியாபாரியிடம் மல்லிகைப் பூவை வாங்கும் வாடிக்கையாளர்.
வியாபாரியிடம் மல்லிகைப் பூவை வாங்கும் வாடிக்கையாளர். (ETV Bharat)

இந்நிலையில், மதுரை மலர் சந்தையில் இன்றைய தினம் மல்லியின் வரத்து வெகுவாகக் குறைந்து கிலோ சுமார் 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முறையே, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் மதுரை மல்லியின் விலை கிலோவுக்கு ரூ.10,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மலர் சந்தையில் மல்லியின் விலையைத் தவிர்த்து, பிற மலர்களின் விலை நிலவரத்தை கீழ்வருமாறு காணலாம். அதன்படி, கிலோவுக்கு

மதுரை மலர் சந்தையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பூப்பந்துகள்
மதுரை மலர் சந்தையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பூப்பந்துகள் (ETV Bharat)
  • கனகாம்பரம் - ரூ.1,500
  • பிச்சி - ரூ.1,200
  • முல்லை - ரூ.1,300
  • அரளி - ரூ.300
  • பன்னீர் ரோஜா - ரூ.200
  • ரோஜா - ரூ.180
  • மரிக்கொழுந்து - ரூ.150
  • சம்பங்கி - ரூ.150
  • பட்டன் ரோஜா - ரூ.120
  • செவ்வந்தி - ரூ.100
  • கோழிக்கொண்டை - ரூ.100
  • செண்டு மல்லி - ரூ.50
  • தாமரை (ஒன்றுக்கு) - ரூ.20

ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் நம்மிடம் பேசினார்.

மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன்
மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் (ETV Bharat)

அப்போது, வரத்து குறைவு, அதிக விலை காரணமாக பூக்கள் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது என வருத்தம் தெரிவித்தார். மேலும், “மதுரை மல்லிகையை பொருத்தவரை, 300 கிலோவுக்கும் குறைவாகவே வரத்து உள்ளது. கடும் பனிப்பொழிவின் காரணமாக, மல்லிகை விளைச்சலில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அதிர்ச்சி கொடுத்த தங்கம்; ஆறுதல் அளித்த வெள்ளி - இன்றைய விலை நிலவரம்

வரத்து குறைவாக உள்ளதால் விலையும் மிக அதிகமாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு இதே விலை நிலவரம் நீடிக்கும். பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தான், மதுரை மல்லிகை பூவின் விளைச்சல் சற்று அதிகரிக்கும். விலையும் குறைய வாய்ப்பு உள்ளது,” என முருகன் கூறினார்.

மதுரை மல்லிகையின் மணம், தடித்த காம்பு, நீடித்த தன்மை ஆகியவை காரணமாக, கடந்த 2012-ஆம் ஆண்டு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடத்தில் இருந்து பெரிய வரவேற்பு இருப்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மதுரை மல்லியை பயிரிட்டு விவசாயம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.