ETV Bharat / business

கடும் பனிப்பொழிவு: எகிறிய மதுர மல்லி விலை; எவ்வளவு தெரியுமா?

மதுரை மலர் சந்தையில் இன்றைய நிலவரப்படி மதுரை மல்லி கிலோ ரூ.800, பிச்சி ரூ.500, முல்லை ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்கள்
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 17, 2025 at 6:47 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்ததால் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு வாடிப்பட்டி, பாலமேடு, சோழவந்தான், மேலூர், கொட்டாம்பட்டி, வலையங்குளம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும். திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப் படுகின்றன.

குறிப்பாக இந்த பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு இந்தியா முழுவதும் மட்டுமன்றி அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை மல்லிகையின் மணம், தடித்த காம்பு, நீடித்த தன்மை ஆகியவை காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் மதுரை மல்லிகை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மல்லி
மதுரை மல்லி (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், மதுரை மலர் சந்தையில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் பின்வருமாறு:

  • மதுரை மல்லி கிலோ ரூ.800.
  • பிச்சி ரூ.500.
  • முல்லை ரூ.500.
  • செவ்வந்தி ரூ.150.
  • சம்பங்கி ரூ.40.
  • செண்டு மல்லி ரூ.50.
  • கனகாம்பரம் (வரத்து இல்லை).
  • ரோஸ் ரூ.150.
  • பட்டன் ரோஸ் ரூ.180.
  • பன்னீர் ரோஸ் ரூ.200.
  • கோழிக்கொண்டை ரூ.80.
  • அரளி ரூ.150.
  • மரிக்கொழுந்து (வரத்து இல்லை).
  • தாமரை (ஒன்றுக்கு) ரூ.10 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக சாதரண நாட்களில் மல்லிகை பூ ரூ.500க்கும் குறையாமல் விற்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் வரவில்லை என்றாலும், குளிர் காலம் என்பதால் பனி பொழிவு காரணமாக மல்லிக்கை பூவின் வரத்து குறைந்துள்ளது விலை ரூ.800க்கு விற்பனையானது.

இது குறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. இன்று இதுவரை 1.2 டன் பூக்கள் வரத்து உள்ளது. பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. அதனால், இந்த மாதம் பூக்களின் விலை அதிகரித்துள்ளது” என்றார். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை உயர்வு!

தொடர்ந்து கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தினமும் பூஜை செய்ய மலர்கள் வாங்கும் நிலை இந்த விலை உயர்வு பக்தர்கள் சற்று கவலை அடைய செய்துள்ளது.

முன்னதாக கடந்த நவ.12ஆம் தேதி மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.100 அதிகரித்து ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.