ராணி எலிசபெத் வியந்து பாராட்டிய பத்தமடை பாய் தொழில்: எல் நினோவால் நலிவடையும் அவலம்!
எல் நினோவால் ஏற்பட்ட வறட்சியால் பத்தமடை பாய் தயாரிக்கும் முக்கிய பொருளான கோரைப்புல் விலை 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

Published : November 3, 2026 at 6:40 PM IST
|Updated : November 3, 2026 at 7:14 PM IST
- BY இரா. மணிகண்டன்
என்னதான் டிசைனான கட்டில்கள் பல வந்தாலும் கூட, கட்டாந்தரையில் கோரைப்பாய் விரித்து தூங்கும் சுகம் எதிலும் கிடைக்காது என்பார்கள். விதவிதமான மெத்தைகள் நமக்கு சுகத்தை கொடுத்தாலும், பாயில் உறங்குவது தான் இயற்கையான முறை என்பதை அறிந்திருப்போம். அதிலும் உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாய் என்றால் சொல்லவா வேணும்?
300 ஆண்டுகள் பழமையான பத்தமடை பாய்
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் கோரப்புல்லில் இருந்து நெய்யப்படும் பாய், உலக அளவில் பிரபலம். அதாவது 1953-ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணிக்கு பத்தமடைப் பாய் பரிசாக அளிக்கப்பட்டது. இந்தப் பரிசுப் பரிமாற்றம்தான் பத்தமடைப் பாயை அயல்நாட்டிலும் பேசுபொருளாக்கியது.
300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய், மத்திய அரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய் செய்வதை வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்.
ஆனால் கடுமையான விலை வாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் பத்தமடையில் பாய் தொழில் தற்போது நலிவடைந்துள்ளது. 300 குடும்பத்தினர் இருந்த இடத்தில், தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு செய்வதாக கூறுகிறார்கள். அதிலும் கைத்தறி நெசவு செய்பவர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர். பெரும்பாலும் தற்போது விசைத்தறி தான் ஓடுகிறது.

தமிழ்நாட்டில் திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும், பத்தமடைப் பாய் தான் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பிற மாவட்டங்களில் பாய் நெய்வதற்கான கோரைப்புற்களை தோட்டத்தில் பயிரிட்டு உற்பத்தி செய்கின்றனர்.
பாய் நெய்யும் தொழிலில் அதிகம் ஈடுபடும் பெண்கள்
ஆனால், பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற்கையாகவே வளரும் கோரைப்புற்கள் கொண்டு பாய் நெய்வதால் அந்த பாய் உடலுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் பாய் நெய்யும் தொழிலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.
ஆனால் சமீபகாலமாக தாமிரபரணி நதியில் சோலைக் காடுகள் அழிக்கப்பட்டதால் கோரைப்புற்கள் அதிக அளவு கிடைப்பதில்லை. இதனால் பத்தமடை நெசவாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் காவிரிப் படுகையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கோரைப் புற்களை வாங்கி பாய் நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாய் நெசவு செய்ய முதலில் கோரைப்புற்களை வெட்டியெடுத்ததும் முதலில் வெயிலில் உலர வைக்கின்றனர். புற்களை தண்ணீரில் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை அழுக வைத்த பின், ரகத்திற்கு ஏற்ப அவற்றைப் பிரித்து தேவையான வண்ணங்களில் சாயம் பூசுகின்றனர். தொடர்ந்து வண்ணம் பூசிய கோரைப்புற்களை விசைத்தறி, கைத்தறி மூலமாக பாய்களாக நெய்து எடுக்கின்றனர்.
மூன்று வகையான பாய் நெசவு
இது மட்டுமின்றி, இந்த கோரைப் புற்களைக் கொண்டு மணிபர்ஸ், தாம்பூலம் கவர், அர்ச்சனைப் பை, பெண்கள் பயன்படுத்தும் கைப்பை, விசிறி, நகைப்பை என விதவிதமான பேன்சி பொருட்களும் நெசவு செய்யப்படுகின்றன. முரடான பாய், நடுத்தரம், மிக மிக மெல்லிய பாய் என மூன்று வகையான பாய்யை நெசவு செய்கிறார்கள்.
இதில் மிக மிக மெல்லிய பாயை பட்டுப்பாய் என்பார்கள். இந்த பாய் செய்ய கோரைப்புல்லை ஊற வைத்து கத்தியால் உடல் ரோமம் அளவுக்கு மெல்லியதாக இழைக்கிறார்கள். இந்த பாய் விலை அதிகபட்சம் ரூ.13,000 வரை உள்ளது.

எல் நினோவால் ஏற்பட்ட விலை உயர்வு
ஆனால் தற்போது, எல் நினோவால் ஏற்பட்டுள்ள வறட்சியால் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோரைப்புல் விலை 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சாயம் நூலின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பத்தமடை பாயின் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விலைவாசி உயர்வால், பாய் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உற்பத்தியாளர் சுலைமான் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “நான் இந்த தொழிலில் ஐந்தாவது தலைமுறையாக இருக்கிறேன். இங்கு செய்யப்படும் பாய் உலகப் புகழ்பெற்றது. மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. சமீபகாலமாக மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.

கோரைப் புல், சாயப்பொடி, நூல் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோரைப்புல் பெரிய பண்டல் 1,300 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. சாயப்பொடி கிலோ 900 ரூபாயில் இருந்து 1,350 ரூபாயாக அதிகரித்துள்ளது. நூல் விலை 160 ரூபாயலிருந்து 240 ஆக இருக்கிறது. காவிரிப் படுகையில் கோரைப்புல் சரியாக விளையவில்லை. ஏற்கெனவே போட்ட கோரைப்புல்லும், வறட்சியால் கருகிப் போய்விட்டது.
இவற்றின் காரணமாக 3,000 ரூபாய்க்கு விற்பனையான பட்டுப்பாய்யை இன்று 4,000 ரூபாய் வரை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கும் அதிக கூலி கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து பாய் வாங்க வேண்டியுள்ளது.
தண்ணீர் இல்லாததால் விளையாத நாட்டு கோரைப்புல்
எனவே திரும்பவும் செழிப்பாக கோரைப்புல் விளைந்து விற்பனைக்கு வந்தால் தான், பாய் விலை குறையுமா என்பதை பார்க்க வேண்டும். முன்பு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இயற்கையாக விளையக்கூடிய நாட்டு கோரை புல் கிடைத்தது. ஆனால், தற்போது தண்ணீர் சரிவர இல்லாததால் இந்த நாட்டுக்கோரைப்புல் விளையவில்லை.
இதனால் காவிரிப் படுகையில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் கோரைப்புல்லை வாங்கி வருகிறோம். விசைத்தறி பாய், 100 ரூபாயில் இருந்து 550 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டுபாய் 1,700 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 13,000 ரூபாய் வரைக்கும் உள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாய் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளோம்.
லாரிகளில் வந்த கோரைப்புல் தற்போது 'குட்டி யானை' என அழைக்கப்படும் மினி வாகனத்தில் வருகிறது. இந்த அளவுக்கு வரத்து குறைந்துள்ளது. பட்டுப்பாய்தான் விலை உயர்ந்த பாய். 13,000 ரூபாய் மதிப்புள்ள பட்டுபாய் உற்பத்தி செய்ய 45 நாட்கள் வரை ஆகும். ஆனால் பெரிய அளவில் கூலி கிடைப்பதில்லை. எனவே பட்டுபாய் உற்பத்தி செய்த பல பேர் தற்போது இல்லை.

வரவேற்பு அதிகம் - உற்பத்தி குறைவு
பத்தமடையில் தற்போது இரண்டு பேர் மட்டும் தான் பட்டு பாய் தயார் செய்கிறார்கள். பத்தமடை பாய்க்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் பத்தமடையில் 300 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 35 குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். எனவே அரசு நலவாரியம் மூலம் எங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து, தொழில் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும்” என்றார்.
இதுகுறித்து பாய் நெசவு செய்யும் ரகமத்துல்லா பானு கூறுகையில், “நான் சின்ன வயதிலிருந்து பாய் நெசவு செய்கிறேன். தற்போது விலைவாசி உயர்வால் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஓனருக்கு தான் பெரும் சவாலாக இருக்கிறது. விலைவாசி அதிகமாக இருந்தாலும் கூட எங்கள் நலனுக்காக புல் வாங்கி பாய் செய்கிறார்.
பெண்களுக்கான வாழ்வாதாரம்
எங்கள் பகுதியில் பெண்கள் வெளியில எங்கும் சொல்லமாட்டார்கள். இந்த பாய் தொழில் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்கிறோம். ஏற்கெனவே புகழ்பெற்ற இந்த தொழிலில் இருந்த பலர், நெசவு வேலையை விட்டு சென்றுவிட்டார்கள். மேலும் கோரைப் புல் விலை உயர்வால் எங்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
| இதையும் படிங்க: |
செய்யது அலி பாத்திமா கூறுகையில், “நான் 15 ஆண்டுகளாக பாய் நெசவு தொழில் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரே ஒரு தறி மட்டும் வைத்திருந்தேன். தற்போது இந்த தொழில் தெரியாத பல பெண்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். பத்தமடை பாய் என்பதில் எங்களுக்கு பெருமை தான்.
பாய் நெசவு செய்வது கஷ்டம் தான். மிக மெல்லிய பட்டு பாய் செய்வதற்கு ஒரு மாசம் வரை ஆகும். பெண்கள் நாங்கள் ஜாலியாக இங்கு அமர்ந்து வேலை செய்வோம். எனக்கும் இங்கு வந்தால் தான் திருப்தியாக இருக்கும். விலைவாசி உயர்வால் பாய் விலை அதிகரித்துள்ளது. வேலையாட்களுக்கும் அதிக கூலி கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே இந்த தொழில் தற்போது கஷ்டத்தை சந்தித்து வருகிறது" என்றார்.

