இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்த தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.1,25,200-க்கு விற்பனை
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 315-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : March 3, 2026 at 10:35 AM IST
சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ரூ. 1,25,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் முக்கியத்துவமும், மதிப்பும் இந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்து விட்டது. குறிப்பாக, உலக நாடுகளிடையேயான போர் பதற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, பண வீக்கம், பங்குச் சந்தை வீழ்ச்சி போன்றவை பல்வேறு காரணங்கள் விலையேற்றத்துக்கு காரணமாக சொல்லப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலும் விலையேற்றம் தொடர்ந்த நிலையில், ஜனவரி இறுதியிலிருந்து சற்று குறையத் தொடங்கியது.
அதன் பிறகு, ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலையானது கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதும் ஒரே நாளில் சட்டென உயர்ந்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் விலையேற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் நேரத்தில் உலகளவிலான முதலீட்டில் டாலர் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதனால் தங்கம் விலை சற்று குறையும். இருப்பினும் இந்த விலை குறைவு நிரந்தரமல்ல என்று கூறப்படுகிறது.
தங்கம் விலை
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 2) கிராமுக்கு ரூ. 115 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,660-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 920 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,25,280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 1,25,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை ஓரிரு நாட்களுக்கு முன்பு சற்று அதிகரித்த நிலையில் நேற்று கிராமுக்கு ரூ. 10 குறைந்தது. அதன்படி கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 315க்கும், ஒரு கிலோ ரூ. 3,15,000க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்றும் விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
| இதையும் படிங்க: நெல்லையை மிரளவைத்த இரட்டை கொலை - கஞ்சா போதையில் அப்பாவி மக்களை ஓட ஓட வெட்டிய கும்பல் |
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 15,650
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,25,200
வெள்ளி 1 கிராம் - ரூ. 315
வெள்ளி 1 கிலோ - ரூ. 3,15,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
|---|---|---|
| மார்ச் 3 | ரூ.15,650 | ரூ.1,25,200 |
| மார்ச் 2 | ரூ.15,660 | ரூ.1,25,280 |
| மார்ச் 1 | ரூ.15,775 | ரூ.1,26,200 |
| பிப்ரவரி 28 | ரூ.15,550 | ரூ.1,24,400 |
| பிப்ரவரி 27 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| பிப்ரவரி 26 | ரூ.14,920 | ரூ.1,19,360 |
| பிப்ரவரி 25 | ரூ.14,930 | ரூ.1,19,440 |
| பிப்ரவரி 24 | ரூ.14,890 | ரூ.1,19,120 |
| பிப்ரவரி 23 | ரூ.14,860 | ரூ.1,18,880 |
| பிப்ரவரி 22 | ரூ.14,680 | ரூ.1,17,440 |

