ETV Bharat / bharat

ராட்சத சுனாமியாக பாய்ந்து வந்த நிலச்சரிவு: நூலிழையில் உயிர் தப்பிய பெண் திகில் பேட்டி

"திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டு மேலே பார்த்த போது, ஒரு பெரிய மரம் நகர்ந்து வந்தது. இதை கண்டதும் விபரீதம் நடக்க போவதை உணர்ந்து ஓட தொடங்கினேன்"

நிலச்சரிவில் இருந்து தப்பிய பெண்
நிலச்சரிவில் இருந்து தப்பிய பெண் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 6:18 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து நூலிழையில் தப்பிய பெண் ஒருவர், தனது திகில் அனுபவம் குறித்து விவரித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஓடி வருகிறது.

அணைகள், குளங்கள், ஏரிகளில் அபாய அளவை தாண்டி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இதுபோன்ற நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, வயநாடு மாவட்டத்தில் இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டம் மெப்பாடி அருகே உள்ள கல்லாடி சுரங்கப் பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30-க்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த எம்எல்ஏக்கள் - அதிமுகவில் மீண்டும் விரிசல்?

இந்நிலையில், இந்த மண் சரிவில் அதிர்ஷ்டவசமாக பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். மண் சரிவு ஏற்படுவதை கண்ட பெண், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து தப்பியோட முயற்சித்தார்.

அவர் ஓடிக் கொண்டிருக்கும் போதே, பெரும் சுனாமி அலையை போல மாறிய மண்சரிவு அப்பெண் உட்பட சிலரையும், அங்கிருந்த லாரியையும் அசுர வேகத்தில் இழுத்து சென்றது.

நிலச்சரிவில் இருந்து தப்பிய பெண்ணின் பேட்டி (ETV Bharat)

இதில், அந்த பெண்ணுக்கு ஒரு அங்குலம் அருகே லாரியின் டயர் வந்து நின்றது. பின்னர், மண்ணில் பாதி புதைந்திருந்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் இழுத்து மீட்டனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி, காண்போரின் நெஞ்சை பதற வைத்து வருகிறது.

இது குறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறும் போது, "பக்கத்து ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டதால், மேலே பார்த்தேன்.

அப்போது ஒரு மரம் நகர்ந்து கொண்டிருந்தது. விபரீதம் நடக்க போவதை உணர்ந்து, கீழே ஓடினேன். சேரும், சகதியுமாக இருந்ததால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை.

அதற்குள்ளாக, பெரிய அலையை போல வந்த மண் சரிவு என்னை அடித்து சென்று ஒரு லாரிக்கு அடியில் கொண்டு சென்றது. அதுவரை தான் என் நினைவு இருக்கிறது. இப்போது நான் எப்படி உயிருடன் இருக்கிறேன் எனத் தெரியவில்லை" என அந்த பெண் கூறினார்.