படுதோல்வி அடைந்த காங்கிரஸ்... பெரியண்ணன் மனப்பான்மை காரணமா? பீகார் களம் சொல்வது என்ன?
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி, அதிக தொகுதி என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், பீகார் தேர்தல் முடிவு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

Published : November 14, 2025 at 6:26 PM IST
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை அடைந்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதல், பாஜக-ஜேடியூ கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக (92), ஜேடியூ (84), எல்ஜேபி (20) உள்பட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. மகா பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி (24), காங்கிரஸ் (1) தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் போட்டியிட்ட ரோகோபூர் தொகுதியில் வெற்றிபெற திணறி வருகிறார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி பீகார் மாநில தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், படுதோல்வியை சந்தித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு 1947 முதல் 1967 வரை சுமார் 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் கோலோச்சி வந்தது. அதன்பிறகு இடையிடையே வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்து வந்த அக்கட்சி 1990இல் கடைசியாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அதன் பிறகு லாலு பிரசாத் விஸ்வரூபம் எடுக்க, காங்கிரஸ் கட்சி திக்கு தெரியாமல் திணறியது. கூடவே, 2000க்கு பிறகு நிதிஷ்குமார் பீகாரின் முகமாக மாறிய நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தலில் கடும் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 35 ஆண்டுகளில் ஒருமுறை கூட 100 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில்லை. சில முறை நிதிஷ்குமாருடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்கத்தில் வெற்றிபெற்று வந்தது.
ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்கமும் இல்லாமல் போய்விட்டது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 1 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிஷன்கஞ்ச் தொகுதியில் மட்டுமே அக்கட்சி வேட்பாளர் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்பாக ஆர்ஜேடியிடம் 70 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்த காங்கிரஸ் கட்சிக்கு, 50 தொகுதிகள் வரை ஒதுக்க தேஜஸ்வி தயாராக இருந்தும் அதனை ஏற்க அக்கட்சி மறுத்தது. முடிவில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனது விருப்பத்திற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்தியது. சில தொகுதிகளில் அக்கட்சி ஆர்ஜேடி வேட்பாளரை எதிர்த்து நேரடியாக போட்டியிட்டது. கூட்டணியில் ஒருமித்து செயல்பாடாமல், ஆர்ஜேடியிடம் முரண்பட்டதால் அக்கட்சியின் வாக்குகள் முழுவதுமாக காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேர்ந்ததா? என்ற சந்தேகத்தையும் தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி, அதிக தொகுதி என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், பீகார் தேர்தல் முடிவு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பீகார் தேர்தல் முடிவால், அதிக தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு நெருக்கடி தரும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

