அமித் ஷா, நட்டா கூட செய்யாத சாதனை; பாஜகவின் தேசியத் தலைவரான பீகார்காரர் -யார் இந்த நிதின் நபின்?
பாங்கிபூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ள நிதின் நபின், நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அமைச்சரவையில் சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் அங்கம் வகிக்கிறார்.

Published : December 15, 2025 at 5:18 PM IST
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் என்ற உயர் பொறுப்புக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த நிதின் நபின்?
பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்த நிதின் நபினுக்கு தற்போது வயது 45 மட்டும் தான். கயஸ்தா சமூகத்தைச் சேர்ந்த இவர், தமது தந்தை நபின் கிஷோர் சின்ஹாவின் மறைவுக்குப் பிறகு, பதின்ம பருவத்தின் இறுதியில் இருந்தே தீவிர அரசியலில் இருந்து வருகிறார். ஏற்கெனவே நான்கு முறை பீகார் சட்டமன்றத்துக்கு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த அந்த மாநில சட்டமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக எம்எல்ஏ ஆனதுடன், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த முறை பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட் நபின் 98,299 வாக்குகளை அள்ளினார். அத்துடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ரேகா குமாரியை 51,936 வாக்குகள் வித்தியாசத்திலும் வீழ்த்தினார்.

ஐந்த முறை எம்எல்ஏ
கடந்த 2006-ல், இவரது தந்தையின் மறைவை அடுத்து, பீகார் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் நிதின் நபின். அதன் பின்னர் 2010,2015, 2020 மற்றும் 2025 என தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றிப் பெறவே, கட்சி மேலிடத்தின் பார்வை நபின் மீது பட்டது.
श्री नितिन नबीन जी ने एक कर्मठ कार्यकर्ता के रूप में अपनी विशिष्ट पहचान बनाई है। वे एक युवा और परिश्रमी नेता हैं, जिनके पास संगठन का अच्छा-खासा अनुभव है। बिहार में विधायक और मंत्री के रूप में उनका कार्य बहुत प्रभावी रहा है, साथ ही जनआकांक्षाओं को पूरा करने के लिए उन्होंने पूरे…
— Narendra Modi (@narendramodi) December 14, 2025
இளம் வயதில் உயர் பதவி
உலக வழக்கத்திற்கு வேண்டுமானால் 45 என்பது நடுத்தர வயதாக இருக்கலாம். ஆனால் அரசியலில், அதுவும் தேசிய அரசியலில் இது மிகவும் இளம் வயது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வயதில் பாஜகவின் தேசிய செயல் தலைவர் எனும் உயர்ந்த பதவி தேடி வந்துள்ளதன் மூலம், மிகவும் சிறு வயதில் அக்கட்சியில் உயரிய பொறுப்புக்கு வந்தவர் என்ற சாதனையை நிதின் நபின் நிகழ்த்தியுள்ளார். ஏனெனில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற போது அவருக்கு வயது 50. ஜே.பி. நட்டா எனும் ஜெகத் பிரகாஷ் நட்டா இந்தப் பதவிக்கு வந்த போது அவருக்கு வயது 65.
இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல்: பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்டோரை நியமித்தது பாஜக
பாஜகவின் நம்பிக்கையை பெற்றது எப்படி?
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் நிதின் நபினுக்கு இருந்த அபார திறமையை கண்டு கொண்ட பாஜக மேலிடம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கு கடந்த 2023-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவரை அங்கு பொறுப்பாளராக நியமித்தது. அந்தத் தேர்தலில் பாஜக அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு நிதின் நபின் ஆற்றிய முக்கியப் பங்கு தான் இன்றைக்கு அவரை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன்.
கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான முறையான தேர்தல் வரும் ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடைபெறும் பாஜக தேசிய குழுக் கூட்டத்தில் நிதின் நபின் கட்சியின் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
श्री नितिन नवीन को भाजपा का राष्ट्रीय कार्यकारी अध्यक्ष नियुक्त किए जाने पर हार्दिक बधाई एवं शुभकामनाएं। यह खुशी की बात है कि बिहार के रहने वाले श्री नितिन नवीन को भाजपा का राष्ट्रीय कार्यकारी अध्यक्ष नियुक्त किया गया है। वे 5वीं बार विधायक निर्वाचित हुए हैं और हमारे साथ…
— Nitish Kumar (@NitishKumar) December 14, 2025
அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக பாஜக தேசியத் தலைவர் பதவியை அலங்கரித்த ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் 2020-வுடன் நிறைவடைந்தது. அப்போது அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்ட போது, தேசியத் தலைவர் என்ற பதவி, தேசிய செயல் தலைவர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது நட்டாவின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலமும் நிறைவடைந்ததை அடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோடி, நிதிஷ் வாழ்த்து
பாஜக தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "எம்எல்ஏ மற்றும் அமைச்சராக பீகார் மாநிலத்துக்கு சிறப்பான பங்களிப்பு அளித்து வரும் உங்களது ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் பாஜகவை மேலும் வலுப்படுத்தட்டும்" என்று தமது வாழ்த்துச் செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.
"பீகாரில் இருந்து ஒரு தலைவர், பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி" என்று அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


