'திடீர்' மின்வெட்டால் பாதியில் நின்ற லிப்ட்| தலை மாட்டி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு
காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த லிப்ட் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் அமைக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published : July 8, 2026 at 6:40 PM IST
பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில், வீட்டில் அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டில் எதிர்பாராதவிதமாக தலை மாட்டிக் கொண்டதில் 75 வயது மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கடம்மனிட்டா கல்லேலிமுக்கு பகுதியைச் சேர்ந்த மாத்துக்குட்டி (75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மாத்துக்குட்டியால் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை இருந்தது. அவரது வீடு சாலையிலிருந்து சற்றே உயரமான மேட்டுப் பகுதியில் அமைந்திருந்ததால், வாகன நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கு எளிதாக செல்வதற்காக இரும்பு பைப் மற்றும் பீம்களை கொண்டு ஒரு எளிய 'சர்வீஸ் லிப்ட்' போன்ற அமைப்பை வீட்டின் வெளிப்புறத்தில் நிறுவியிருந்தார்.
இன்று பிற்பகல் காரை வீட்டின் கீழே நிறுத்தி விட்டு, மாத்துக்குட்டி வழக்கம் போல வீட்டிற்கு மேலே செல்ல அந்த லிப்ட்டில் ஏறியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் என்ன நடக்கிறது? என்று பார்ப்பதற்காக தலையை வெளியே நீட்டிய போது, லிப்ட்டின் இரும்புச் சட்டங்களுக்கு இடையே அவரது தலை கொடூரமாக மாட்டிக் கொண்டது.
இதனையடுத்து அவர் தலையை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் முடியாமல் போகவே அவர் சப்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி, கணவரின் தலை மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, லிப்ட்டை உடைத்து அவரை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியாததால், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி இரும்புப் பைப் மற்றும் பீம்களை வெட்டி எடுத்து மாத்துக்குட்டியை மீட்டனர். எனினும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த லிப்ட் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் அமைக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

