மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் இருந்து மாயமான ஏ.கே 47 துப்பாக்கிகள்; ‘அலெர்ட்’ நிலையில் செகந்திராபாத்
வளாகத்திற்குள் வெளியாட்கள் நுழைவதற்கான வாய்ப்பு ஏதுமில்லாததால், பணியாளர்களில் ஒருவரே இதற்குப் பொறுப்பாக இருக்கக்கூடும் என ராணுவ அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.

Published : September 2, 2026 at 10:51 AM IST
ஹைதராபாத்: கடும் பாதுகாப்புக்கு கீழ் பராமரிக்கப்பட்டு வரும் ஹைதராபாத்தில் உள்ள ராணுவ மையமான மெட்ராஸ் ரெஜிமென்டில் 4 ஏ.கே 47 துப்பாக்கிகள் உள்பட 12 வெடிபொருள்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செகந்திரபாத்தில் உள்ள ராணுவ மையமான கான்டோன்மென்ட் (ராணுவ முகாம்) பகுதியில் பாதுகாப்புப் படை பயிற்சி மையங்களைச் சேர்ந்த பல்வேறு படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டும் ஒன்று. இங்கு ராணுவ வீரர்களின் ஆயுதங்களைச் சேமித்து வைப்பதற்கென ஒரு தனிப் பிரிவு உள்ளது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
உயர் ரக துப்பாக்கிகள் மாயம்
அதிஉயர் பாதுகாப்பு வளையங்களை கொண்ட இந்த பகுதியில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இரவு நேரத்தில், அனுமதியில்லாத தனிப்பிரிவுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து, அறையின் பூட்டை உடைத்து, நான்கு AK-47 ரக துப்பாக்கிகள், ஆறு கைத்துப்பாக்கிகள் (pistols), ஒரு INSAS ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், திங்கள்கிழமை அன்று பொல்லாரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது பாதுகாப்புத் துறை சார்ந்த விவகாரம் என்பதால், காவல்துறை இது குறித்த விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராணுவத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர். வளாகத்திற்குள் வெளியாட்கள் நுழைவதற்கான வாய்ப்பு ஏதுமில்லாததால், பணியாளர்களில் ஒருவரே இதற்குப் பொறுப்பாக இருக்கக்கூடும் என அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
மெட்ராஸ் ரெஜிமென்ட் (Madras Regiment) பொல்லாரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது என்பதால், திங்கள்கிழமை காலை அங்கு புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மல்காஜ்கிரி காவல் ஆணையரகத்தின் உயர் அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
தனி ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை
மெட்ராஸ் ரெஜிமென்ட் வளாகத்தில் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி உண்டு. வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாது. இவ்வளவு பாதுகாப்பான இடத்திலிருந்து ஆயுதங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| இதையும் படிங்க: மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்: டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை |
ஆயுதங்களின் அதிக எடையைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு தனிநபரால் அவற்றை எடுத்துச் சென்றிருக்க முடியாது என்று காவல்துறை சந்தேகிக்கிறது. குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஈடுபாடு இருக்கலாம் என்று முதற்கட்ட சந்தேகங்கள் எழுகின்றன.
குற்றவாளிகளால் ஆயுதங்கள் வைக்கப்பட்ட அறை வரை செல்ல முடிந்ததிலிருந்து, அந்த வளாகத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரின் தொடர்பு இதில் இருக்கலாம் என்பது புலனாகிறது. மூத்த காவல்துறை அதிகாரிகள் மெட்ராஸ் ரெஜிமென்ட் வளாகத்திற்கு வந்து, அருகிலுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேவேளையில், ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் பணியாளர்களிடம் உள்விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

