"இந்திய குடியரசின் ஓர் அங்கம்தானே தமிழ்நாடு?" ஜவஹர் நவோதயா பள்ளிகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்
கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் பள்ளிகளை திறப்பதில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Published : December 15, 2025 at 9:14 PM IST
புதுடெல்லி: மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை (JNV) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு தேவையான நிலங்களை அடையாளம் காணும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நிலங்களை அடையாளம் காணும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்," ஜவஹர் வித்யாலயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறப்பதற்கு இடைக்கால தடைவிதித்து கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு தற்போது கொஞ்சம் மாற்றி எழுதப்படுகிறது. இதன்படி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு அடையாளம் காண வேண்டும். இந்தப் பணிகள் அடுத்த ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட்டு, அதன் நிலை அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, "நாம் கூட்டாட்சி அமைப்பில் இருக்கிறோம்" என்று குறிப்பிட்ட நீதிபதிகள்,"தமிழ்நாடு இந்திய குடியரசின் ஓர் அங்கம்தானே?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், "பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும் பள்ளிகளை திறக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுடன் ஒரு மாநில அரசு மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது" என்றும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன், "தமிழ்நாட்டில் கற்பித்தல் தரம் மிகவும் உயர்வாக உள்ள பல பள்ளிகள் உள்ளன" என்று வாதிட்டார்.
அத்துடன், ஜவஹர் நவோதயா பள்ளிகளை திறக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 30 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனவும், அந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறி வருகிறது" என்றும் கூறினார்.
மேலும், "சமக்ரா சிக்ஷா திட்டத்தை செயல்படுத்தியதில் மத்திய அரசுடன் தமிழக அரசுக்கு கசப்பான அனுபவம் உள்ளது" என்று எடுத்துரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், " இந்தத் திட்டத்துக்காக மாநில அரசு செலவு செய்த ரூ.2000 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை திருப்பித் தரவில்லை. இதுதொடர்பான வழக்கும் இந்த நீதிமன்றத்தில்தான் உள்ளது. மத்திய அரசு எங்களை (தமிழக அரசு) இப்படி நடத்துவது சரியல்ல" என்று வில்சன் வாதிட்டார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதி நாகரத்னா," மொழிக் கொள்கையை காரணம்காட்டி (இருமொழிக் கொள்கை), கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்பை தடுக்கக்கூடாது. மத்திய அரசுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று சொல்லக் கூடாது. ஏனெனில் நாம் கூட்டாட்சி அமைப்பில் இருக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை மொழிப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம்" என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ஜவஹர் நவோதயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, குமாரி மகா சபா என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த பள்ளிகள் 'தமிழ் கற்றல் சட்டம் 2006'ஐ மீறாது என்ற நிபந்தனையுடன், தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, கடந்த 2017 செப்டம்பர் 11-ம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2017, டிசம்பர் 11-இல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

