ஆடு திருட வந்தவர்கள் என ஊரே சேர்ந்து தாக்கிய கொடூரம் - சிறுவன் உயிரிழப்பு
சம்பித் பிந்தானி உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுவன் பாரிபாடா பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published : March 4, 2026 at 3:45 PM IST
மயூர்பஞ்ச் (ஒடிசா): ஆடு திருட வந்ததாக இரண்டு சிறுவர்களை ஊர் மக்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது ராய்ரங்பூர் என்ற கிராமம். இதன் அருகில் உள்ளது பூட்டகாபாதி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பிந்தானி. இவருடைய ஒரே மகன் சம்பித் பிந்தானி. இவர் அருகே உள்ள பாசிங்கி என்ற கிராமத்தில் உள்ள தனது தாய் மாமாவின் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 3) மாலை அருகில் உள்ள இந்தகோலி என்ற கிராமத்தில் இரண்டு சிறுவர்களை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளவர்களில் சம்பித் பிந்தானியும் ஒருவர். சிறுவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அங்கிருந்தவர்களில் ஒருவர் சம்பித் பிந்தானியின் தந்தை ராஜ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தார். ஆனால் அவர் அங்கு செல்வதற்கு முன்பே, போலீசார் சிறுவர்கள் இருவரையும் மீட்டு ஜரடிஹி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ராஜ்குமார் அங்கு சென்ற போது, சம்பித் பிந்தானி உள்ளிட்ட 2 சிறுவர்களும் பலத்த ரத்த காயங்களுடன் இருந்தனர்.
மகனின் இந்த நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்த ராஜ்குமார் என்ன நடந்தது என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அதற்குள், சிறுவர்கள் இருவரும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக ராய்ரங்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் சிறுவர்கள் இருவரும் ராய்ரங்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கு சிறுவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சம்பித் பிந்தானி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
| இதையும் படிங்க: நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்; ஒரு போஸ்டர் தான் பிரச்சினைக்கு காரணமா? அதிர்ச்சி பின்னணி |
இதனையடுத்து, ஒரு ஊரே ஒன்று சேர்ந்து தனது மகனை அடித்து கொன்று விட்டதாக ராஜ்குமார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், பிஎன்ஸ் சட்டத்தின் பிரிவு 31/26-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் உடனடியாக இந்தகோலி கிராமத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பேரில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். எதற்காக 9 ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்றீர்கள் என காவல் துறையினர் விசாரித்த போது, 4 சிறுவர்களை ஆடு திருட வந்தவர்கள் என ஊர் மக்கள் சந்தேகித்து பிடித்ததாகவும், அதில் 2 பேர் தப்பியோடிய நிலையில், எஞ்சிய 2 பேரை தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முதலில் சிறுவர்கள் வந்த இரு சக்கர வாகனங்களை ஊர் மக்கள் எரித்துள்ளனர். அப்போது அந்த 2 சிறுவர்களும் தப்பிக்க முயன்ற போது ஊர் மக்கள் அவர்களை கட்டிப் போட்டு கொடூரமாக அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சிறுவன் சம்பித் பிந்தானி, ராய்ங்பூர் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுவன் பாரிபாடா பிஆர்எம் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆடு திருட வந்தவர்கள் என நினைத்து பள்ளி மாணவனை ஊர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் ஒடிசா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

