ETV Bharat / bharat

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்: டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

சம்பந்தப்பட்ட பேருந்தில் இருந்து சிறுமியின் தலைமுடி உள்ளிட்டவற்றை தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இவை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வெளியானதும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 7:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

புது டெல்லி: ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012-ம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தை போலவே இந்தக் கொடூர சம்பவமும் நடந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு, 'நொய்டா செக்டார் 36' பகுதிக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். (டெல்லி - உ.பி. எல்லையில் நொய்டா அமைந்துள்ளது)

பெற்றோர் மீது கோபம்; வெளியேறிய சிறுமி

படிப்பில் கவனம் செலுத்துமாறு அவரது பெற்றோர் திட்டியதால், அவர்களிடத்தில் கோபித்துக் கொண்டு, நொய்டா செக்டார் 63-இல் உள்ள தனது மைத்துனர் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் சிறுமி பயணித்துள்ளார்.

தவறுதலாக இறங்கிய சிறுமி

அந்த பேருந்து நொய்டாவின் பாரி செளக் பகுதியில் நின்ற போது, அதுதான் செக்டார் 63 என நினைத்து சிறுமி அங்கு இறங்கியுள்ளார். அப்போது அங்கு கடும் மழைப்பொழிவு இருந்துள்ளது. சிறிது நேரத்தில், தான் தவறுதலாக இங்கு இறங்கிவிட்டோம் என உணர்ந்த சிறுமி, அந்த வழியாக வந்த ஒரு ஸ்லீப்பர் சொகுசு பேருந்தை கை காண்பித்து நிறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மேயர் பிரியா தவெக அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை: பேரவையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா

ஆளில்லாத சொகுசு பேருந்து

தொடர்ந்து, அதிலிருந்த நடத்துனரிடம் நொய்டா செக்டார் 63-க்கு பேருந்து செல்லுமா? என சிறுமி கேட்க, அவரும் 'செல்லும்' எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த பேருந்து உண்மையிலேயே டெல்லியின் திமர்பூர் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது.

ஆனால், இது தெரியாத சிறுமி, நடத்துனர் கூறியதை நம்பி, பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது பேருந்தில் யாருமே இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமிக்கு அருகே வந்த நடத்துநர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிடவே, அவரை நடத்துநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பிறகு அந்த சிறுமியை டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அவர்கள் இறக்கிவிட்டு, இங்கு நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

ஆனால், அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமி, நேராக காஷ்மீரி கேட் காவல்நிலையத்துக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

அதிரடியில் இறங்கிய போலீஸ்

சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அனுப்பினர். தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், அவர்கள் வந்ததும் சிறுமியை ஒப்படைத்தனர்.

இதையடுத்து, தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சிறுமி கூறிய இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட சொகுசு பேருந்தை அடையாளம் கண்டனர்.

24 மணிநேரத்தில் கைது

பின்னர், திமர்பூர் பணிமனையில் அந்த பேருந்து நின்று கொண்டிருப்பதை உறுதி செய்த போலீசார், அங்கு சென்று அதன் ஓட்டுநர் குல்தீப், நடத்துனர் சந்தீப் ஆகியோரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பேருந்தில் சிறுமியின் தலைமுடி

இதனிடையே, சம்பந்தப்பட்ட பேருந்தில் இருந்து சிறுமியின் தலைமுடி உள்ளிட்டவற்றை தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இவை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வெளியானதும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் லதா குப்தா கூறுகையில், "ஓடும் பேருந்தில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஒரு கொடூரக் குற்ரம். இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளோம்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத் தர நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

'அறத்தை மறந்துவிட்டோம்'

அடிப்படை பண்புகள் கூட சமூகத்தில் குறைந்து வருவதாக உணர்கிறேன். உரிமைகளை பற்றி அனைவரும் பேசுகிறோம். ஆனால், நமது அடிப்படை கடமைகளை அனைவருமே மறந்துவிடுகிறோம். நாட்டின் தலைநகரத்தில் இதுபோன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது" என லதா குப்தா கூறினார்.

நிர்பயா கொடுமையை மறக்க முடியுமா?

டெல்லியில் தற்போது நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவம் 2012-இல் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை ஒத்துள்ளது.

டெல்லியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் இரவு பயணித்த நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 22 வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த நிர்பயா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்த 13 நாட்களில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு கடந்த 2020-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.