'திருப்பரங்குன்றம் தீர்ப்பு' - தமிழக அரசு மீண்டும் அரசியல் செய்யக் கூடாது என பியூஷ் கோயல் பேட்டி
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இந்து மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

Published : January 6, 2026 at 4:12 PM IST
புதுடெல்லி: திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு இந்து மதத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பை காட்டுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்திய நீதிபதிகள், கடந்த வாரம் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கள் வரவேற்று அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த தீர்ப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றனர். இது தற்செயலான நிகழ்வு அல்ல.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை தமிழக அரசு திட்டமிட்டு தடுத்தது. கார்த்திகை தீபம் அன்று மலையில் நடைபெற வேண்டிய கொண்டாட்டத்தையும், பாரம்பரியத்தையும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து பக்தர்கள் நீதி கேட்டு நீதிமன்றம் சென்றனர்.
தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அங்குள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இது தமிழக அரசின் சனாதன தர்மத்திற்கு எதிரான பாரபட்ச தன்மையையும், இந்துக்களுக்கு எதிரான மனநிலையும் தெளிவாக வெளிப்படுத்தியது.
குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இந்து மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்துக்களுக்கு அங்கு தீபமேற்றும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழக மக்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் அரசியல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

