இனி கேரளா அல்ல 'கேரளம்' - பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்
மாநிலத்தில் அதிகம் பேசப்படும் மொழிகளை அடிப்படையாக கொண்டு மொழிவாரி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரிக்கப்பட்டன.

Published : February 24, 2026 at 5:04 PM IST
புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் கேரளம் என்று குறிப்பிடப்பட்டு வந்தாலும், ஆங்கிலத்திலும், மத்திய அரசு ஆவணங்களிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இனி அனைத்து மொழிகளிலும் கேரளம் என்ற அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த பெயர் மாற்ற தீர்மானத்தை கேரள மாநில அரசு நிறைவேற்றி இருந்தது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த தீர்மானத்தை, மத்திய அமைச்சரவை இன்று அங்கீகரித்துள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3-ன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் புதிய பெயர் நடைமுறைக்கு வரும்.
ஏற்கனவே முதன்முறையாக பெயர் மாற்றம் செய்ய கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களை பரிந்துரைத்ததன் காரணமாக இரண்டாவது முறையாக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பபட்டது.
முன்னதாக, மாநிலத்தில் அதிகம் பேசப்படும் மொழிகளை அடிப்படையாக கொண்டு மொழிவாரி மாநிலங்கள் 1956-ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரிக்கப்பட்டன. அதன்படி, தற்போதைய தமிழ்நாடு, மெட்ராஸ் ஸ்டேட் என்று பிரிக்கப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மொழிகளை அடிப்படையாக கொண்டு 14 மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் ஒரு மாநிலத்திற்கு மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயரிட்டதை எதிர்த்து, தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டி தியாகி சங்கரலிங்கனார் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்து உயிரிழந்தனர்.
தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு அண்ணா தலைமையிலான அமைச்சரவை மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி தீர்மானத்தை இயற்றிய நிலையில், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து 1967 ஜூலை 18 ஆம் நாள் முதல் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதை போன்றே தற்போது கேரளாவின் பெயரும் கேரளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டவுள்ளது.

