சமூக சேவையில் முன்மாதிரியாகத் திகழும் உஜ்ஜைன் உடன் பிறப்புகள்
உஜ்ஜைன் நகரில் நடக்கும் முக்கியமான திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஆகாஷும், ஹேமலதாவும் காவல் துறைக்கும் நிர்வாகத்திற்கும் உதவியாக இருப்பதை பார்க்க முடியும்.

Published : August 31, 2026 at 9:00 AM IST
உஜ்ஜைன்(மத்திய பிரதேசம்): சகோதர பாசத்தையும், பந்தத்தையும் வெளிப்படுத்தும் பண்டிகை ரக்ஷா பந்தன். ஆனால், மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் உள்ள அக்காவும், தம்பியும் சமூக சேவையாற்றி தங்கள் சகோதர பந்தத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக, பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வேளையில், உஜ்ஜைன் நகரை சேர்ந்த ஆகாஷ் சூர்யவன்ஷியும், அவருடைய அக்கா ஹேமலதாவும், நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சமூக சேவையாற்றி வருகிறார்கள்.
பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள திருவிழாவாக இருந்தாலும், ஷிப்ரா ஆற்றங்கரையில் ஏற்படும் பேரிடராக இருந்தாலும், யாராக்காவது ரத்தம் தேவைப்பட்டாலும் முதலில் களத்திற்கு வருபவர்கள் இவர்கள்தான்.
ஹேமலதாவின் பயணம், சமூக சேவையுடன் நின்று விடவில்லை. அவர் துணிச்சலுக்கும் பாராட்டு பெற்றவர். கடந்த ஏப்ரல் மாதம் உஜ்ஜைனில் பஞ்சகோஷி யாத்ரா நடைபெற்றபோது ஷிப்ரா ஆற்றின் ஶ்ரீராம் படித்துறையில் சமூக சேவைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 14 வயது சிறுமி ஒருவர், ஆற்றில் மூழ்கி ஆழமான பகுதிக்குச் சென்றார்.
| இதையும் படிங்க.. இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் இந்துவே அல்ல - மோகன் பகவத் காட்டம் |
அப்போது அருகில் இருந்த ஹேமலதா, தனது உயிரை பொருள்படுத்தாமல் உடனே ஆற்றில் குதித்து அந்த சிறுமியை பத்திரமாக மீட்டார். இவருடைய துணிச்சலை பாராட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவித்தார்.
ஹேமலதாவுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரம், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அவர் பேரிடர் காலங்களில் உதவும் சிவில் டிஃபென்ஸ் படையில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வருகிறார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சமூக சேவை ஆற்றி வருவதன் மூலம் நேரடி அனுபவத்தை பெற்று வருகிறார்.
ஹேமலதாவை போன்று அவருடைய தம்பி ஆகாஷும் சேவையை வாழ்க்கையின் ஓர் அங்கமாக கருதுகிறார். கடந்த 2018இல் நாட்டு நலப் பணித் திட்டத்தில் இணைந்த இவர், 13 முறை ரத்த தானம் செய்துள்ளார். அதுமட்டுமன்றி, பொதுமக்கள் ரத்த தானம் செய்வதற்கு ஊக்குவித்து வருகிறார். இதுதவிர, பல்வேறு நிறுவனங்களின் சார்பிலும், தனி நபராகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கரோனா காலத்திலும் பொதுமக்களுக்கு உதவி செய்துள்ளார். இவர்கள் ஈடுபடும் எந்த சமூக சேவைக்கும் பணம் வாங்குவதில்லை.
உஜ்ஜைன் நகரில் நடக்கும் முக்கியமான திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஆகாஷும், ஹேமலதாவும் காவல் துறைக்கும் நிர்வாகத்திற்கும் உதவியாக இருப்பதை பார்க்க முடியும். ஆகாஷின் சமூக சேவையை பாராட்டி மத்திய பிரதேச உயர்கல்வித் துறை அவருக்கு மாநில அளவிலான அங்கீகாரத்தை கடந்த ஆண்டு கொடுத்தது.
ஆகாஷும், ஹேமலாதவும் சமூக சேவையில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் பாராட்டு, அங்கீகாரம் ஆகியவற்றை விட சேவைதான் முக்கியம் என்று கருதுகின்றனர்.
ஆகாஷ், ஹேமலதாவுக்கு நந்தினி என்ற தங்கையும், மோகித் என்ற தம்பியும் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பேரிடியாக இவர்களின் தந்தை மோகன்லால் சூரிவன்ஷி மறைந்து விட்டார். குடும்ப பொறுப்புகள் இருந்தாலும் ஹேமலதாவும் ஆகாஷும் சமூக சேவையை விட்டுவிடவில்லை. தந்தை மோகன்லால் மற்றும் தாயார் சங்கீதா ஆகிய இருவரும்தான் தங்களுக்கு இ்ன்பைரேஷன் என்று இருவரும் கூறுகிறார்கள்.
ஆகாஷ், சட்டப்படிப்பை முடித்து விட்டு உஜ்ஜைன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஆகாஷ் தற்போது மேற்படிப்பு படித்து வந்தாலும் சமூக சேவையை கைவிடவில்லை.
தனது சமூக சேவை குறித்து ஹேமலதா கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை இதுதான் என் மூலதனம். நான் சிவில் டிஃபன்சில் சேர்வதற்கு இங்கிருந்து பயிற்சி பெறுகிறேன். யாருக்காவது உதவுவதுதான் மிகப்பெரிய மூலதனம். அது அளவற்ற மனநிறைவைத் தருகிறது" என்றார்.
இதேபோன்று ஆகாஷ் கூறுகையில், "சமூகச் சேவை செய்வதற்கான ஆர்வம் என் குடும்பத்தில் இருந்து எனக்கு வந்தது. வாழ்க்கை நடத்த வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். விரைவில் ஒரு திறமையான வழக்கறிஞராகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் கனவு" என்று தெரிவித்துள்ளார்.

