நீட் வினாத்தாள் வெளியான விவகாரம்: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ
சிபிஐ இதுவரை 49 இடங்களில் நடத்திய சோதனைகளில், பல்வேறு ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Published : May 27, 2026 at 12:26 PM IST
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை தேசிய தேர்வு முகமை கைது செய்திருக்கிறது. இதன்படி இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் தேர்வு நடப்பதற்கு முன்பே கசிந்தது தெரிய வந்த நிலையில், அந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, இதன் மறு தேர்வானது ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.
இதனிடையே, தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை 49 இடங்களில் சோதனைகள் நடத்தி, பல்வேறு ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்திருக்கிறது. மேலும் ஏற்கனவே 11 பேரை கைது செய்திருக்கிறது.
இந்நிலையில் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் இருவரை சிபிஐ கைது செய்திருக்கிறது. அதன்படி, லத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் புனேயைச் சேர்ந்த ஒரு பயிற்சி மைய ஆசிரியர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்போது கைது எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லத்தூரைச் சேர்ந்த டாக்டர் மனோஷ் ஷிருரே, பயிற்சி மைய உரிமையாளரின் மகன் உட்பட 3 மாணவர்களுக்கு பி.வி குல்கர்னியிடமிருந்து வேதியியல் வினாக்களை பெற்று தந்துள்ளார். இந்த பயிற்சி மையம் ஏற்கனவே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், குல்கர்னியும் ஏற்கனவே சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| இதையும் படிங்க: சிபிஎஸ்இ மறுமதிப்பீடு கட்டணம் செலுத்துவதில் கோளாறு - சைபர் அட்டாக் காரணமா? ஐஐடி இயக்குநர் விளக்கம் |
புனேவில் செயல்பட்டு வருகிற டாக்டர் அபங் பிரபு மருத்துவ அகாடமியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த தேஜஸ் ஹர்ஷத் குமார் ஷா என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 2026 இளநிலை நீட் தேர்வில் இயற்பியல் வினாக்களும் கசிந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மனிஷா ஹவல்டாரிடமிருந்து ஹர்ஷத் ஷா வினாத்தாளை பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணை நிலவரம் குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “மத்திய அரசின் உயர்கல்வி துறை அமைச்சகம் அளித்த புகாரின்பேரில் மே 12 ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. உடனே, சிறப்புப்படைகள் அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிபிஐ இதுவரை 49 இடங்களில் நடத்திய சோதனைகளில், பல்வேறு ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதுவரை டெல்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே, லத்தூர் மற்றும் அஹ்லியா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்கு முன்பே வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் வினாத்தாள்கள் எப்படி கசிந்தன? என்பதற்கான உண்மையான காரணத்தை இந்த விசாரணை வெளிக்கொண்டு வரும்” என்று தெரிவித்தார்.

