ETV Bharat / bharat

தவெகவுடன் கூட்டணி அமைக்க என். ரங்கசாமி விருப்பம்? முந்துகிறதா காங்கிரஸ்? - தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் விஜய்யை நேசிக்கின்றனர். அது வெற்றி உறவுக்கு கைகொடுக்கும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன்
புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 9, 2026 at 12:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணியிலிருந்து விலகி தவெக எம்.எல்.ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் ஆட்சியை தொடர விரும்புவதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், ஒருவேளை இந்த நகர்வு ஏற்பட்டால், அது காங்கிரஸுக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

புதுச்சேரியில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி 18 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மீண்டும் என். ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், அங்கு இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் என். ரங்கசாமி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, 3 இடங்களை தன்வசம் வைத்துள்ள தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடர விரும்புவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனால் உஷாரான காங்கிரஸ் தலைமை, தவெக உடனான தங்களது கூட்டணியை முன்கூட்டியே உறுதிப்படுத்தும் நோக்கில், விரைவில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை மனுவை தமிழக அமைச்சர்களிடம் கொடுத்திருக்கிறது. புதுவை விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு பணியானது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்துள்ளது. எனவே தமிழக அரசிடம் பேசி நில எடுப்பு பிரச்சினையை சரிசெய்து பல்நோக்கு விமான நிலையமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.

அதேபோல், வீடூர் மற்றும் சாத்தனூரில் இருந்து புதுச்சேரிக்கு நீர்வரத்து ஏற்படுத்தி கொடுக்குமாறும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி புதுச்சேரிக்கு தரவேண்டிய நீரை பெற்றுத்தர முயற்சி எடுப்போம். மேலும், திருச்செந்தூரில் புதுச்சேரிக்காக விடுதி கட்ட வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் முதலமைச்சர் விஜய்யுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பார்.

இதையும் படிங்க: அமைச்சரவை அமைக்காவிட்டால் புதுச்சேரியை காப்பாற்றுவது கடினம் - தவெக நிர்வாகி சாடல்

காவிரி கடைமடை நீர், காரைக்காலுக்கு 7 டிஎம்சி தரவேண்டியுள்ளது. அதை வழங்குவதை சீர்செய்ய கோரியுள்ளனர். அதுகுறித்தும் பேசுவோம். புதுச்சேரியில் மாநில பல்கலைக்கழகம் இல்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் நாளந்தா போன்று உலக பல்கலைக்கழகம் அமைக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு வருகிறார். அதில் புதுச்சேரிக்கான மாணவர் சேர்க்கையும் இருக்கும்” என்று புதுச்சேரிக்கான தேவைகள் குறித்து தெரிவித்தார்.

தொடர்ந்து, “புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைய முடிவு செய்ய இருக்கிறோம். புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் விஜய்யை நேசிக்கின்றனர். அது வெற்றி உறவுக்கு கைகொடுக்கும். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினரை முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசுவார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவுடன் நெருக்கமான உறவில் இல்லாத நிலையில், தவெகவுடன் நெருக்கமாக இருக்கும் நீங்கள் (காங்கிரஸ்) கூட்டணிக்கு அழைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். அத்தைக்கு எப்போது மீசை முளைக்கும்? அப்போது பார்ப்போம்” என்றார்.

மேலும் விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாட்டில் லஞ்சம் ஒழிந்துவிட்டது என்று கூறிய அவர், ஆளுநருடன் மோதல்போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை என்றும், தமிழக மண் சார்ந்த உரிமை, நலன் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.