தெருநாய்கள் மன நிலையை புரிந்து கொள்ள முடியாது - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
தெருநாய்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று யாரும் கூறவில்லை. சாலைகளில் நாய்கள் வராமல் இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published : January 7, 2026 at 5:22 PM IST
புதுடெல்லி: நாய்கள் மனிதர்களைக் கடிக்கக் கூடாது என்று யாராவது அறிவுறுத்த வேண்டும் என்றும் தெருநாய்கள் எந்த மனநிலையில் இருக்கின்றன என்று யாராலும் கணிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தெருநாய் கடித்து ஏற்படும் ரேபிஸ் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அப்போது அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள தெருநாய் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கில் டெல்லி உட்பட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களையும் ஒரு தரப்பாக நீதிபதிகள் சேர்த்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் நீதிபதிகள், டெல்லியில் உள்ள தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து பல்வேறு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பல்வேறு கருத்துக்களை கேட்ட உச்ச நீதிமன்றம், முந்தைய உத்தரவை நிறுத்தி வைத்ததோடு, ஆக்ரோஷமான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை மட்டும் காப்பகத்தில் வைத்து, மற்ற நாய்களை கருத்தடை செய்து மீண்டும் விடலாம் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் வந்தது. தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள், ''தெருநாய்கள் கடிப்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை. அவைகள் சாலையில் ஓடுபவர்களுக்கும், வாகனங்களுக்கும், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இரு சக்கர வாகனம் அல்லது மிதிவண்டியில் செல்லும் போது நாய்கள் துரத்துகின்றன. அப்போது கடிக்கவும் செய்யலாம். இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.'' என்ற நீதிபதிகள், வழக்கறிஞர் கபில் சிபலிடம், ''நீங்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறீர்களா, இல்லையா?'' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், '' நான் எனது ஆரம்ப காலத்தில் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி உள்ளேன். நான் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்த போது கூட அங்கு நாய்கள் இருந்தன, ஆனால் எதுவும் என்னைக் கடிக்கவில்லை'' என குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, '' நீங்கள் உண்மையைத் தான் கூறுகிறீர்களா? உங்கள் தகவல்கள் எல்லாம் காலாவதியானவை. பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல தெருநாய் கடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன'' என்பதை சுட்டிக்காட்டினார்.
அதனை தொடர்ந்து கபில் சிபல், அனைத்து நாய்களையும் காப்பகத்தில் அடைப்பது தீர்வல்ல. திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை நீங்கள் அறிந்தால், நாய் காப்பகங்களில் எந்த மாதிரியான உணவு கொடுக்கப்படும் என்பது உங்களுக்கு தெரிய வரும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அறிவியல் முறையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து நாய்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது தீர்வாகாது. அது ஒரு இலகுவான வழியில் இருக்க வேண்டும்'' என வாதிட்டார்.
அதற்கு நீதிபதி மேத்தா, ''நாய் காப்பகங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் சிறந்த உணவுகள் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் ஆகியவை தெருக்கள் அல்ல. அங்கு ஏன் உங்களுக்கு நாய்கள் தேவைப்படுகின்றன? நாய்களைப் பிடித்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று யாரும் கூறவில்லை. சாலைகளில் நாய்கள் வராமல் இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம். நாய்கள் மனிதர்களைக் கடிக்கக் கூடாது என்று யாராவது அறிவுறுத்த வேண்டும். தெருநாய்கள் எந்த மனநிலையில் இருக்கிறது என்று யாராலும் கணிக்க முடியாது. அது கடிக்க நினைக்கிறதா, இல்லையா? என்பதை அடையாளம் காண உங்களால் முடியாது.'' என தெரிவித்தார். இந்த வழக்கு நாளை (ஜன.8) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

