ETV Bharat / bharat

'பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்' சாதிச் சான்றிதழ் அரசாணை ரத்து: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

முந்தைய திமுக ஆட்சியில் இஸ்லாம் மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியை கோர வழி வகை செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 8:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: இஸ்லாம் மதத்திற்கு மாறும் நபர்கள், தாங்கள் மதம் மாறிய காரணத்திற்காக மட்டுமே பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அண்மையில் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். பின்னர் 'முஸ்லிம் லெப்பை' சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை வருவாய்த் துறையினர் நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று தமிழக அரசு ஒரு முக்கிய அரசாணையை பிறப்பித்தது. அதன்படி, இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதியினர் பிரிவை சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறும் போது, அவர்கள் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்' (BC-Muslim) ஆக கருதப்பட்டு, ஏழு அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகங்களில் ஒன்றின் கீழ் சாதிச் சான்றிதழ் பெறலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீர் அஹமது தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி அமர்வு "ஒருவர் இஸ்லாமுக்கு மதம் மாறியவுடன் அவர் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார். லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், ஷேக், சையத் போன்ற குறிப்பிட்ட முஸ்லிம் சமூகங்களின் உறுப்பினராக மதமாற்றத்தின் மூலம் ஆக முடியாது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் உள்பட 7 இடஒதுக்கீட்டு பிரிவுகளின் கீழ் சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு 2024-ல் வெளியிட்ட அரசாணை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணானது.

நீதிமன்றத் தீர்ப்புகளை நிர்வாக உத்தரவுகள் மூலம் மாற்ற முடியாது. மதமாற்றத்தின் மூலம் குறிப்பிட்ட சமூக அடையாளத்தைப் பெற முடியாது. லெப்பை, ராவுத்தர் போன்ற சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவாகியவை" எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, மனுதாரருக்கு 'முஸ்லிம் லெப்பை' சான்றிதழ் வழங்க முடியாது. இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியைக் கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. மேலும், இந்த வழக்கிற்கு அடிப்படையாக இருந்த தமிழக அரசின் அரசாணையை செல்லாது" என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.