தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட தடையில்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
வக்ஃபு வாரியத்திற்கு இதுவரை 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும், 3 பேர் மட்டுமே நியமிக்கப்படவில்லை என மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

Published : February 19, 2026 at 3:26 PM IST
புதுடெல்லி: தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு, தலைவர் உள்பட உறுப்பினர்களை நியமனம் செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்தும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி வழக்கறிஞர் சவுகத் அலி முகமது எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் ஜனவரி 9-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விதிகளின்படி, வக்ஃபு வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் இரண்டு பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும், மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், உறுப்பினர்கள் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படாததால் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவர், வாரியத்திற்கு இதுவரை 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும், 3 பேர் மட்டுமே நியமிக்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு இது ஒரு சரியான காரணமாக இருக்க முடியாது என்றார். மேலும், பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடைபெறுவதால், அதன் பிரதிநிதியை நியமிக்க முடியவில்லை என்றும் வில்சன் வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதிகள், புதிய குழுவை நியமிப்பதற்கான பரிந்துரையை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியும் உத்தரவிட்டனர்.

