ETV Bharat / bharat

வேதாந்தா குழும தலைவரின் மகன் அக்னிவேஷ் அகர்வால் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

நாம் சம்பாதிக்கும் பணத்தில் 75 சதவீதத்தை, சமூகத்துக்கு திருப்பிக் கொடுப்பதாக அக்னியிடம் நான் சத்தியம் செய்து கொடுத்தேன். அந்த சத்தியத்தை நனவாக்கவும், மிக எளிமையான வாழ்க்கையை வாழவும் இன்று முதல் நான் உறுதியேற்கிறேன்.

மகன் அக்னிவேஷுடன் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்  (கோப்புப்படம்)
மகன் அக்னிவேஷுடன் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 11:23 AM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வந்த வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் (49), பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் நிறுவனம் வேதாந்தா. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்ததும் வேதாந்தா நிறுவனம் தான்.

இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால், அமெரிக்காவில் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது அக்னிவேஷ் அகர்வால் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து, அவர் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்த அக்னிவேஷ், நேற்று எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தந்தையின் உருக்கமான பதிவு

இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "எனது அன்பு மகன் அக்னிவேஷ் எங்களை விட்டு மிக சீக்கிரமாக பிரிந்து விட்டான். அவனுக்கு 49 வயது தான் ஆகிறது. ஆரோக்கியம் நிறைந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கை அவனுடையது. அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவன், மவுன்ட் சினாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நிலை நன்றாக தேறி வந்தான். ஆனால், திடீர் மாரடைப்பு அவனை எங்களிடம் இருந்து பிரித்து விட்டது.

தங்கள் பிள்ளையை நிரந்தரமாக வழியனுப்பும் ஒரு பெற்றோரின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மகன் என்பவன் தந்தைக்கு முன்பே மரணிப்பவன் அல்ல. இந்த இழப்பு எங்களை முழுமையாக சோர்வடைய செய்துவிட்டது.

1976 ஜூன் 3 ஆம் தேதி அக்னி பிறந்தது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ஒரு நடுத்தர பிகாரி குடும்பத்தில் பிறந்த அக்னி, வலிமையான, மனிதாபிமானமுள்ள மனிதனாக வளர்ந்தான். அவனது அம்மாவின் வாழ்க்கையின் வெளிச்சமாகவும், உடன்பிறந்தவர்களின் பாதுகாவலனாகவும், உண்மையான நண்பனாகவும் அவன் பல பரிமாணங்களை எடுத்துள்ளான்.

என்னை பொறுத்தவரை, அவன் எனக்கு மகன் மட்டுமல்ல. என் நணபன். எனது பெருமை. என் உலகம் அவன். கிரணும், நானும் உடைந்து நிற்கிறோம். அதே சமயத்தில், வேதாந்தாவில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் எங்கள் பிள்ளைகள்தானே என நினைத்து எங்களை நாங்களே தேற்றிக் கொள்கிறோம்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் 75 சதவீதத்தை, சமூகத்துக்கு திருப்பிக் கொடுப்பதாக அக்னியிடம் நான் சத்தியம் செய்திருக்கிறேன். அந்த சத்தியத்தை நனவாக்கவும், மிக எளிமையான வாழ்க்கையை வாழவும் இன்று நான் உறுதியேற்கிறேன். நீ இல்லாமல் இனி எப்படி இந்த பாதையில் நடக்கப் போகிறேன் எனக்கு தெரியவில்லை. உனது வெளிச்சத்தை வைத்துக் கொண்டு நடைபோட முயற்சிக்கிறேன்" என அனில் அகர்வால் தனது பதிவில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

"அக்னிவேஷ் அகர்வாலின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. உங்களின் உருக்கமான பதிவில் இருந்தே உங்களின் சோகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது புரிகிறது. இந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கான வலிமையையும், மன தைரியத்தையும் உங்களுக்கு கொடுக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.