மழையிலும் நீடிக்கும் சிஜேபி போராட்டம்| ஜூலை 20-ல் நாடாளுமன்ற முற்றுகைக்கு சோனம் வாங்சுக் அழைப்பு
சோஃபாக்களில் அமர்ந்து கொண்டு சமூக ஊடகங்களில் ஆதரவு செய்திகளை அனுப்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு வர வேண்டும் என சோனம் வாங்சுக் கேட்டு கொண்டுள்ளார்.

Published : July 9, 2026 at 11:52 AM IST
புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 20-ஆவது நாளை எட்டியுள்ளது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வரும் 20-ந் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார்.
இளநிலை நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும், தேர்வு முறைகேடுகளால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் கடுமையான வானிலை சவால்களையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜந்தர் மந்தரில் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்
இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் கடந்த 11 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் எடை 7 கிலோவிற்கும் அதிகமாக குறைந்து, உடல் நிலை நலிவடைந்துள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தனது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கும் ஜூலை 20 ஆம் தேதி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஒரு பிரமாண்டமான மற்றும் அமைதி பேரணியை நடத்தப் போவதாக சோனம் வாங்க்சுக் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழைய விலை நோக்கி நகரும் தங்கம்: இன்றும் ரூ. 240 குறைவு
PEACEFUL MARCH TO THE PARLIAMENT, 20th JULY
— Sonam Wangchuk (@Wangchuk66) July 8, 2026
Thanks for all your messages to break my Hunger Strike, but that wouldn't help the 20 students who committed suicide nor will that help protect the mountains of Ladakh or the rivers of India. If you really want to help then do a little… pic.twitter.com/XvQ1CRIlTW
பொதுமக்களுக்கு அழைப்பு
'வெறும் சோஃபாக்களில் அமர்ந்து கொண்டு சமூக ஊடகங்களில் ஆதரவு செய்திகளை அனுப்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகவும் நாட்டின் எதிர் காலத்திற்காகவும் மக்கள் அனைவரும் டெல்லிக்கு நேரில் வந்து ஜூலை 20 பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்' என்று சோனம் வாங்சுக் எக்ஸ் தளம் மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

