7 வருட காத்திருப்புக்கு பிறகு கர்நாடகா பெண்ணை கரம் பிடிக்கும் குரங்கு மனிதன்
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்தவரே இந்த ஜோதிராஜ். சிறுவயதில் தவறுதலாக குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், அவர் தற்போது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் வசித்து வருகிறார்.

Published : August 30, 2026 at 9:36 PM IST
சித்திரதுர்கா: முதல் திருமணம் நின்ற நிலையில், ஏழு வருட காத்திருப்புக்கு பிறகு கர்நாடகா பெண்ணுடன் குரங்கு ராஜுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
கர்நாடகா மக்கள் பலராலும் பிரியமாக 'குரங்கு ராஜ்' என்று அழைக்கப்படும் நபர் ஜோதிராஜ். குரங்கு மனிதன் என்ற மற்றுமொரு பெயரும் இவருக்கு உண்டு. மலையேறுவதில் கில்லாடியான இவர், நீர்வீழ்ச்சிகளில் அடித்து செல்லப்பட்டவர் மற்றும் மலையேற்றங்களின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரும் வேலையையும் பார்த்து வருகிறார்.
அந்தவகையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் 'ஜாக் நீர்' வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவரும் நீர் வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கிறார்.
அந்த நேரத்தில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும், காணாமல் போயிருந்த ஜோதிராஜ் சுமார் 2-3 நாட்களில் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில காரணங்களால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நடைபெறாமல் போயிருக்கிறது.
இந்த சூழலில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிராஜ் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். இவருக்கும் சித்ரதுர்கா மாவட்டம், சால்லகெரே தாலுகாவில் உள்ள தொட்டா உள்ளார்த்தி கிராமத்தைச் சேர்ந்த நிவேதிதா என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்திற்கு தன்னுடைய தன்னுடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜோதிராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் வசிக்கும் தேனிக்காரர்
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்தவரே இந்த ஜோதிராஜ். சிறுவயதில் தவறுதலாக குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், அவர் தற்போது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் வசித்து வருகிறார்.
குரங்குகளே வழிகாட்டி
எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் செங்குத்தான பாறைகள் மற்றும் உயரமான கோட்டை சுவர்களை ஏறும் திறன் கொண்டவராக ஜோதிராஜ் அறியப்படுகிறார். இந்த திறன் காரணமாகவே அவரை கர்நாடகா மக்கள் குரங்கு ராஜ் மற்றும் குரங்கு மனிதன் என பிரியமுடன் அழைக்கின்றனர்.
இந்த திறனை யாரிடமும் இருந்தும் கற்கவில்லை, குரங்குகளிடம் இருந்தே கற்றேன் என ஜோதிராஜ் ஊடக பேட்டிகளின்போது கூறியுள்ளார். குரங்குகளைப் போலவே மலையேறுவது, சத்தமிடுவது மற்றும் தலைகீழாக தொங்குவது என பல்வேறு சாகசங்களை அவர் செய்வார்.
அடுத்த மாதம் நடைபெறும் திருமணம்
ஜோதிராஜின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனக் கூறப்படுகிறது. மேலும், முன்னதாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் அத்தை மகளே நிவேதிதா என்றும், தானும் அப்பெண்ணும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் எனவும் ஜோதிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த திருமணம் வரும் 22-23 தேதிகளில் சித்ரதுர்காவில் உள்ள வைபவ் கார்டனில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த திருமணத்திற்கு சுமார் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வரலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. எனவே திருமணத்தில் நிதி பிரச்சனை ஏற்படும் என ஜோதிராஜ் அச்சம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தற்போது அவர் நிதி உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையறிந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சர்வதேச கலைஞர் பிரவீன், கர்நாடகா எம்எல்ஏக்கள் ஆஞ்சநேயா மற்றும் சந்திரப்பா ஆகியோர் நிதி உதவி வழங்க இருப்பதாக வாக்குறுதி அளித்திருக்கின்றனர்.
இதேபோல், திருமணம் மண்டம் சார்பிலும் வாடகை மற்றும் பிறவற்றில் சலுகை வழங்குவதாக அறிவித்திருப்பதாக ஜோதிராஜ் தெரிவித்துள்ளார்.
நிவேதிதாவை தூக்கிக் கொண்டு பாறை ஏறுவேன்
செய்தியாளர்களிடம் பேசிய குரங்கு மனிதன் ஜோதிராஜ், "திருமணத்திற்கு பிறகு நான் மிகவும் கவனமாக மலையேறுவேன். நிவேதிதாவை அழைத்துக் கொண்டு பாறைகளில் ஏறுவேன். முருகனின் ஆசீர்வாதம் எனக்கு உண்டு. அவர் என் திருமணத்தை ஆசீர்வதிப்பார். நான் கீழே விழுந்து எலும்பு முறிந்தபோதும் உயிர் பிழைத்தவன். என் சித்ரதுர்கா மக்கள் என்னை வந்து ஆசீர்வதிக்க வேண்டும்" என கூறினார்.

