'குழந்தை இறங்கிட்டா பொறுப்பு முடிஞ்சிடாது' - பள்ளி வாகன விபத்து வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாட்டில் பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.

Published : July 3, 2026 at 6:07 PM IST
பெங்களூரு: பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்களில் பயணிக்கும் குழந்தைகள், பள்ளி முடிந்து பத்திரமாக தங்களது வீடுகளைச் சென்றடையும் வரை அவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான வழிகாட்டுதல்களையும் கர்நாடக உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பெங்களூருவில் பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்ற எல்.கே.ஜி மாணவர் ஒருவர், துரதிர்ஷ்டவசமாக அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியது.
நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள்
குழந்தைகள் பள்ளிப் பேருந்தில் ஏறியது முதல் அவர்கள் மீண்டும் பாதுகாப்பாக தங்களது வீட்டை (அல்லது தேர்வு செய்யப்பட்ட பேருந்து நிறுத்தத்தை) அடையும் வரை அவர்கள் பள்ளியின் கண்காணிப்பிலேயே இருப்பதாகவே கருதப்படும்.

பள்ளிப் பேருந்து நிறுத்தத்தில் குழந்தைகளை பெற்றோர் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட காப்பாளர்களிடம் பேருந்து உதவியாளர் நேரடியாக ஒப்படைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிறுத்தத்திற்கு பெற்றோர்கள் யாரும் குழந்தையை அழைக்க வரவில்லை என்றால், அந்தக் குழந்தையை தனியாக வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மீண்டும் பள்ளி வளாகத்திற்கே பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
"குழந்தை பேருந்தை விட்டு இறங்கிவிட்டது, எனவே எங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது" என்று பள்ளி நிர்வாகம் தங்களது கடமையில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த விதிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தால், அதற்குப் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரே சட்டப்படி முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களையும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமைந்த இந்தத் தீர்ப்பு, அங்கு அனைத்துப் பள்ளி நிர்வாகங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள வழிகாட்டுதல்கள்
ஆனால், தமிழ்நாட்டில் பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவது இங்கு ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

