கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர்களுக்கு எதிரான திமுகவின் அவசர மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள ஒரு வழக்கில், சிபிஐ விசாரணை முடிவடைவதற்குள், குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைச்சரே இப்படிப் பேசுவது சட்டவிரோதமானது மற்றும் நியாயமான விசாரணைக்கு எதிரானது என்று திமுக தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

Published : July 6, 2026 at 12:33 PM IST
|Updated : July 7, 2026 at 8:20 AM IST
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சாட்சிகளை கலைக்கும் வகையில் தவெக தலைவர்கள் பொதுவெளியில் பேசுவதற்கு தடை விதிக்க கோரி திமுக தாக்கல் செய்த மனுவை, இன்று (ஜூலை 7, 2026, செவ்வாய்க்கிழமை) அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 6) நீதிபதிகள் இசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்னிலையில் இந்த அவசர முறையீடு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசேபா அகமதி தாக்கல் செய்த இந்த இடைக்கால மனுவில், "தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெகவினர், கரூர் விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசவோ அல்லது அரசியல் எதிரிகள் மீது பழி சுமத்தவோ தடை விதிக்க வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், "சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களே தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகிப்பதால், அவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தவும், கலைக்கவும் வாய்ப்புள்ளது.
ஜூலை 10 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் இதர நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் இந்த வழக்கில் மிக முக்கியச் சாட்சிகள் என்பதால், இந்தச் சந்திப்பு விசாரணையைப் பாதிக்கலாம்" என திமுக அச்சம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆம் தேதி தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "கரூர் சம்பவத்திற்கு அப்போதைய திமுக அரசு தான் காரணம். இதற்கு நாங்கள் வட்டியும் முதலுமாக பழி தீர்ப்போம்" என்று பேசியது சர்ச்சையானது.
| இதையும் படிங்க: ஆளுநர் அர்லேகரால் மீண்டும் சர்ச்சையான வைகை: உண்மையில் சீரழிகிறதா? சீர்பெறுகிறதா? ஓர் அலசல் |
உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள ஒரு வழக்கில், சிபிஐ விசாரணை முடிவடைவதற்குள், குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைச்சரே இப்படிப் பேசுவது சட்டவிரோதமானது மற்றும் நியாயமான விசாரணைக்கு எதிரானது என்று திமுக தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியதோடு, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு கண்காணிக்கவும் உத்தரவிட்டது.
தற்போது தமிழ்நாட்டில் திமுக-தவெக இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

