ETV Bharat / bharat

விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை விதித்த வழக்கு: வாதியாக சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி

தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 15, 2025 at 11:01 PM IST

1 Min Read
Choose ETV Bharat

டெல்லி: விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்தது தொடர்பான வழக்கில் தனது வாதத்தை தீர்ப்பாயம் கேட்கக்கோரி நாடு கடந்த தமிழீழ அரசின் 'பிரதமர்' என கூறிக்கொண்டு ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1992ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், இலங்கையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ருத்ரகுமாரன் என்பவர் தன்னை நாடுகடந்த தமிழீழ அரசின் 'பிரதமர்' எனக் கூறிக்கொள்கிறார். இவர், விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் தன்னை ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து ருத்ரகுமாரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் நாடுகடந்த தமிழ் அரசாங்கத்தின் 'பிரதமர்' என்று கூறினார். மேலும், ருத்ரகுமாரன் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராகவும், சமாதான முன்னெடுப்புகளில் பங்கேற்றவராகவும் இருந்ததாக தெரிவித்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை சட்டப்பூர்வமானது அல்ல என்றும் வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், மனுதாரர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் தமது உத்தரவில் கூறி இருப்பதை சுட்டிக்காட்டினர்.

இதையும் படிங்க: அன்றிலிருந்து இன்று வரை... அப்துல் கலாமின் பார்வையில் பாதுகாப்புத் துறை!

அதற்கு வழக்கறிஞர், "இந்த அறிவிப்பு மனுதாரரை நேரடியாக பாதிக்கிறது. தமிழீழம் என்றால் என்ன என்பது குறித்து மனுதாரர் அறிந்தவர். தீர்ப்பாயம் அவரது வாதத்தை நிச்சயம் கேட்க வேண்டும்" என கூறினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ''ருத்ரகுமாரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரோ அல்லது அலுவலகப் பொறுப்பாளரோ அல்ல. அவரை இந்த விவகாரத்தில் தலையிட அனுமதிப்பது கொள்கைப் பிரச்சினைகள் மற்றும் பிற நாடுகளுடனான உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து மனுவை திரும்பப் பெற வழக்கறிஞர் அனுமதி கேட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் அளித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய பிற தீர்வுகளைப் பெற மனுதாரருக்கு வாய்ய்புக்கள் உள்ளன என்பதையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.