பிரதமருக்கு கொலை மிரட்டல்? போர்க்களமான நாடாளுமன்றம்: பாஜக-காங்கிரஸ் எம்பிக்கள் வார்த்தை மோதல்
டெல்லியில் நடத்திய பேரணியால், பாஜகவினர் இத்தகையை அவமரியாதையான கருத்துக்களை காங்கிரஸ் கட்சியினர் கூறுவதாக திரித்து நாடாளுமன்ற நடவடிக்கையை மடைமாற்றுகிறார்கள் என அக்கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Published : December 15, 2025 at 3:58 PM IST
புதுடெல்லி: பிரதமர் மோடியின் உயிருக்கு காங்கிரஸ் கட்சியினரின் அச்சுறுத்தல் விடுத்துள்ளாக குற்றஞ்சாட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், 'பிரமதர் மோடிக்கு கல்லறை கட்டப்படும், இன்று இல்லையேல் நாளை..' என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவினர் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவினர் இன்று அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுகையில், "நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை மிரட்டினர். அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமாதி தோண்டப்படும் என்று கூறுகிறார்கள். இது போன்ற தரம் தாழ்ந்த கருத்துக்களை இதற்கு முன் நாங்கள் கேட்டதில்லை.
#WATCH | Delhi | On slogans raised against PM Modi in Congress rally yesterday, Congress MP Priyanka Gandhi Vadra says," you (the media) don't ask why the union parliamentary minister himself was disturbing the proceedings of the house... no one from the stage said anything like… pic.twitter.com/1dPjBMtpF0
— ANI (@ANI) December 15, 2025
காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் சித்தாந்தங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராகுல் காந்தி இடதுசாரி சித்தாந்தத்தையோ அல்லது அவரது கட்சி விரும்பும் வேறு எந்த ஒரு சிந்தாந்தத்தையோ பின்பற்றலாம். ஆனால், நாம் நாட்டுக்காக பணியாற்றுகிறோம் என்பதை சிறிதும் நினைவில் கொள்ளாமல், பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். பிரதமரின் உயிரை பறிப்போம், அவருக்கு சமாதி கட்டுவோம் என்று கூறுவது எல்லாம் இந்திய அரசியல் வரலாற்றில் தூரதிருஷ்டவசமானது. நாம் அனைவரும் போட்டியாளர்கள் தான், ஆனால் எதிரிகள் அல்ல. 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். இந்தியாவை வலிமையானதாகவும், பெருமைமிக்கதாகவும் மாற்றுவதே பிரமதர் மோடியின் கனவு" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவினர் ஒருபோதும் யாருடைய பெற்றோர்களையும் அவமரியாதை செய்தது இல்லை. யாருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்தது இல்லை. ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வகையில் நாங்கள் உங்களை விமர்சிக்கிறோம். ஆனால், யாரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் ஒரு போதும் இருந்ததில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, "நேற்று காங்கிரஸ் கூட்டத்தில் பிரதமருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. இது போன்ற சிந்தனைகள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையும், மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களை கூறுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக சோனியா காந்தி இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. இது எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி வேணுகோபால் கூறுகையில், "டெல்லியில் நாங்கள் ஒரு வெற்றிகரமான பேரணியை நடத்தியதால் இன்று பாஜகவினர் உருவாக்கியுள்ள ஆதாரமற்ற நாடகம் இது. எந்த ஒரு காங்கிரஸ் தலைவராவது பிரதமரை பற்றி ஏதாவது கருத்து கூறினார்களா? என்று அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேட்டேன். பேரணியில் இருந்த சிலர் அப்படி கூறியதாக அவர் தெரிவித்தார். இது ஆதாரமற்றது. அரசியல் எதிரிகளாக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசியல் தலைவருக்கும் எதிராகவும் இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத முழக்கத்தை பயன்படுத்துவது எங்கள் வழக்கம் அல்ல. கடந்த வாரம் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுக்களை அனைவரும் பார்த்தோம். அத்தகைய கருத்துக்களை நாங்கள் எப்போதும் பேசியதில்லை. இனியும் பேச மாட்டோம்" என்றார்.
இது தொடர்பாக பேசிய பிரியங்கா காந்தி, "அவையின் நடவடிக்கையை திசை திருப்பும் ஒரு நடவடிக்கையாக தான் பாஜகவினரின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும். நேற்று மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இது தொடர்பாக பேசவில்லை. யாரோ பேசியதாக இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? டெல்லி காற்று மாசு தொடர்பாக விவாதிக்க நாங்கள் வலியுறுத்திய நிலையில், அதை மடைமாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது" என்றார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்திய நிலையில், பாஜக-காங்கிரஸ் கட்சி எம்பிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

