ETV Bharat / bharat

எரிபொருள் சிக்கன நடவடிக்கை; புதுச்சேரியில் அரசுத் துறைகளுக்கு கடும் கட்டுப்பாடு

அரசின் சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தி, எரிபொருள் நுகர்வைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Newsonair)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 10:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சிக்கன அழைப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில், அரசு சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் சரத் சவுகான் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தி, எரிபொருள் நுகர்வைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணங்கள் ஒத்திவைப்பு

அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், கல்விச் சுற்றுப் பயணங்கள் மற்றும் ஆலோசனைப் பயணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முடியும்.

இதையும் படிங்க.. கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து

அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வாகனப் பகிர்வு (கார் பூலிங்) முறையைப் பின்பற்றி, தேவையற்ற வாகனப் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். எரிபொருள் நுகர்வை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். துறைகளுக்கு இடையிலான கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள், ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் காணொலி முறையில் நடத்த வேண்டும். இதனால் பயணச் செலவுகள் கணிசமாகக் குறையும்.

அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தங்கள் அலுவலகப் பயணங்களுக்கு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பேருந்துகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கலாம்.

மின்சார சேமிப்பு நடவடிக்கைகள்

அரசு அலுவலகங்களில் மின்சார சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், கணினிகள் மற்றும் பிற மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் மின்சார பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

மதிய உணவு நேர வழிகாட்டுதல்

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு நேரத்தில் வீட்டுக்குச் செல்லாமல், உணவை அலுவலகத்துக்கு எடுத்து வருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரமும் எரிபொருள் செலவும் மிச்சமாகும். வளர்ச்சி ஆணையர், அனைத்து ஆணையர்கள், அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் புதுச்சேரி அரசின் நிர்வாகச் செலவுகள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க.. 'திருமணமான மகள்' எனக் கூறி சலுகைகளை மறுப்பது சட்டவிரோதமானது; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சிக்கன அழைப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.