'காக்ரோச் ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
'காக்ரோச் ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கை முடக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துரையின் பேரில் எக்ஸ் நிறுவனம் அந்த பக்கத்தை முடக்கியது.

Published : May 29, 2026 at 4:22 PM IST
புதுடெல்லி: 'காக்ரோச் ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கு முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே நாட்டில் வேலையில்லாத இளைஞர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இழிவுபடுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தனது கருத்து தொடர்பாக விளக்கமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதுதொடர்பாக விளக்கமளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "வேலையில்லாத இளைஞர்கள் சிலர், ஊடகம், சட்டம் போன்ற துறைகளில் நுழைந்து அந்த அமைப்பையே சீர்குலைக்கிறார்கள். அவர்களை குறிப்பிட்டே இந்த கருத்தை தெரிவித்தேன். இந்திய இளைஞர்கள் அனைவரையும் குறிப்பிடும்படியாக தனது கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராக, இன்ஸ்டகிராம் பக்கத்தில் 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு புதிய சமூக வலைதள கணக்கு தொடங்கப்பட்டது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அபிஜீத் தீப்கே என்ற 30 வயது இளைஞர் தொடங்கி, கட்சியின் தலைவராகவும் உள்ளார். அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடிந்துள்ள அவர், வேலை தேடி கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இவரின் இந்த சமூக வலைதளப்பக்கத்தை லட்சக்கணக்கான பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில், 2 கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் எங்கும் நிறைந்திருக்கும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' இளைஞர்களிடம் எழுச்சி பெற்று வந்த நிலையில், அதன் எக்ஸ் பக்கம் கடந்த 21ஆம் தேதி முடக்கப்பட்டது.
'காக்ரோச் ஜனதா கட்சி'-யின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி புருஷைந்திர குமார் கௌரவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அபிஜீத் தீப்கே காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி CJP-யின் 'X' கணக்கை உடனடியாக மீட்டெடுப்பது குறித்து எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டார். மேலும் இது சம்மந்தமாக மத்திய அரசு மற்றும் எக்ஸ் நிறுவனம் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், 'காக்ரோச் ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கை முடக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, எக்ஸ் நிறுவனம் அந்த பக்கத்தை முடக்கியது. CJP எக்ஸ் பக்கம் 2,27,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

