ETV Bharat / bharat

ராமோஜி ஃபிலிம் சிட்டியின் புதிய அம்சம்: ஹாலிவுட் அனுபவத்தை தரும் 'லாக் அண்ட் எஸ்கேப்' மிஸ்டரி எஸ்கேப் கேம்ஸ்

விளையாட்டில் கொடுக்கப்படும் சவால்கள் முதலில் கடினமாக தோன்றினாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசித்து விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்
ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 4:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும் ஹாலிவுட் திரைப்பட அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் ‘லாக் N எஸ்கேப் - மிஸ்டரி எஸ்கேப் கேம்ஸ்’ என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரங்களுள் ஒன்று ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி. இங்கு அந்தந்த பருவ நிலைகளுக்கு ஏற்ப சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கும் வகையில், ‘லாக் N எஸ்கேப் - மிஸ்டரி எஸ்கேப் கேம்ஸ்’ என்ற சாகச பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு வேடிக்கை, சஸ்பென்ஸ் மற்றும் குழுவாக சேர்ந்து விளையாடும் அனுபவங்களை தரும் நோக்கில் மிஸ்டரி கேம்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘லாக் N எஸ்கேப் - மிஸ்டரி எஸ்கேப் கேம்ஸ்’ -இல் வெவ்வேறு தீம்களைக் கொண்ட 10 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் ஒரு கருப்பொருள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு அறைக்கு 15 நிமிடங்கள் என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும் கொடுக்கப்பட்டுள்ள புதிர்களை தீர்த்தல், மறைந்துள்ள தடயங்களை கண்டுபிடித்தல் போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் பங்கேற்பாளர்கள் முடிக்க வேண்டும். மிஸ்டரி எஸ்கேப் கேம்களில் ஒவ்வொரு அறையும் பிரபல ஹாலிவுட் படங்களின் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜுராசிக் வேர்ல்டு, ஹாரி பாட்டர், மாயாஜாலம் மற்றும் சவாலான புதிர்கள் போன்றவை அவற்றில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ''ராமோஜி ஃபிலிம் சிட்டியின் பிரம்மாண்டத்தால் மெய்சிலிர்த்து போனோம்'' - கனடிய பிரதிநிதிகள் குழு

அவற்றில் ‘தி சீக்ரெட் த்ரோன்’ அனைவரின் கவனத்தையும் பெரிதளவில் ஈர்க்கிறது. இதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சாவியை தேடி கண்டுபிடித்தால்தான் அடுத்தகட்ட விளையாட்டையே திறக்க முடியும்.

இந்த விளையாட்டு ஏற்பாடு குறித்து ராமோஜி ஃபிலிம் சிட்டியின் விளையாட்டு இயக்குநர் ஜெய் கூறுகையில், “சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், அவர்களுக்கு முழுமையான விளையாட்டு அனுபவத்தை கொடுக்கவும் இந்த அம்சம் அற்புதமான விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளை மேலும் சுவாரஸ்யமாக்க ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான சீன்களை உருவாக்கி இருக்கிறோம்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையும் மிகவும் வித்தியாசமானது. புதுப்புது சவால்களை கொடுக்கிறது. விளையாட்டுகளில் உள்ள மர்மங்களை கண்டறிய குழுவாக இணைந்து செயல்படுவதுடன், புத்திசாலித்தனமும் தேவைப்படும்” என்கிறார்.

விளையாட்டில் கொடுக்கப்படும் சவால்கள் முதலில் கடினமாக தோன்றினாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசித்து விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாகச உணர்வை கட்டாயம் கொடுக்கும் என்றும் கூறுகிறார் ஜெய்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள மிஸ்டரி எஸ்கேப் கேம்ஸ் அம்சமானது ஃபிலிம் சிட்டிக்கு வருபவர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், மறக்கமுடியாத சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தையும் தரும் என்கின்றனர் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள்.