ETV Bharat / bharat

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட ரூ.2,500 எப்போது? முதல்வர் ரங்கசாமி பதில்

முதியோர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கான உதவித் தொகையை ரூ.500 உயர்த்தி விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 7:18 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுச்சேரி: வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதற்கான சிவப்பு நிற ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு, வரும் 12 ஆம் தேதி அல்லது பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர், "எங்கள் அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உள்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்களுக்கான நலத் திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது, தரமான கல்வி, மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்துவது ஆகியவையே அரசின் முதன்மை இலக்குகள். அந்த வகையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்களை பரிசீலித்து, சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றியுள்ளது.

மேலும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் இன்னும் பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன” என தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (ETV Bharat Tamil Nadu)

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து பேசுகையில், "அரசு நல்லாட்சியை வழங்கி, மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாகத் தீர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

எந்தவித அரசு உதவியும் பெறாத வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதற்கான சிவப்பு நிற ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.2,500 ஆக உயர்த்தி, வரும் 12 ஆம் தேதி அல்லது பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வழங்கப்படும். மேலும் மஞ்சள் ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும், இந்த உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதே போல், முதியோர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கான உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வும் விரைவில் அமல்படுத்தப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

இதையும் படிங்க: சிக்கலில் 'ஜனநாயகன்' ரிலீஸ் - ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு

இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் ரங்கசாமி, "பொங்கலுக்கு எந்த அளவுக்கு பரிசுத் தொகை வழங்க முடியுமோ, அவை அனைத்தும் வழங்கப்படும்" என்றார்.

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் அது குறித்து கேட்ட போது, ”போலி மருந்துகள் விவகாரம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.