EXCLUSIVE: பழங்குடியின அடையாளத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? மொழியியல் அறிஞர் சதுபதி பிரசன்னாஸ்ரீ பேட்டி!
நீங்கள் உங்கள் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் உங்கள் மொழியை உயிருடன் வைத்திருக்க வேண்டும். அதுவும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் என்று பேராசிரியை சதுபதி பிரசன்னாஸ்ரீ தெரிவித்தார்.

Published : November 17, 2025 at 5:43 PM IST
ஹைதராபாத்: பிற மொழிகள் பழங்குடியின மக்களின் மொழியை அழிப்பதாக பேராசிரியையும், மொழியியல் அறிஞரும், ராமோஜி ராவ் சிறப்பு விருது பெற்றுவருமான சதுபதி பிரசன்னாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க மொழியியல் அறிஞர்களில் ஒருவரும், ஆந்திராவில் துணைவேந்தராகப் பணியாற்றிய முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பேராசிரியை சதுபதி பிரசன்னாஸ்ரீ, பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க தனது வாழ்க்கையை கழித்து வருகிறார்.
அழிந்து வரும் மொழிகளை ஆவணப்படுத்துவது முதல் வாய்மொழியாக மட்டுமே உள்ள மொழிகளுக்கான எழுத்துகளை உருவாக்குவது வரை, அவரது பணி நீண்ட காலமாக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளது. கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் ராமோஜி சிறப்பு விருதைப் பெற்ற அவர், மொழியியலில் தனது பயணம், தனது நோக்கத்தை வடிவமைத்த சந்தர்ப்பம், சமூக யதார்த்தங்கள் மற்றும் மொழி ஏன் நமது அடையாளத்தின் சக்தி வாய்ந்ததாக உள்ளது என்பது குறித்து நமது ஈடிவி பாரத்தின் சித்தார்த் ராவிடம் பேசினர். அந்த பிரத்யேக நேர்காணலின் முழு விவரம் வருமாறு:

கேள்வி: ஸ்டூவர்ட்புரத்தில் பிறந்து இன்று இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது எப்படி?
பேராசிரியை சதுபதி பிரச்சன்னாஸ்ரீ: நான் ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்தவள் என்பதை பெரும்பாலான மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். உண்மையில், நான் அப்படி இல்லை. என் தாத்தா ஒரு ஆசிரியராகவும், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர். அவர் 14 வயதில் தனது பயணத்தை தொடங்கினார். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். மேலும் அவர் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், தொழில்ரீதியாக கல்கத்தாவுக்கு சென்றார். எனவே நாங்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால், என் பெற்றோர் ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் எனது மூதாதையர்கள் ஸ்டூவர்ட்புரத்தை சேர்ந்தவர்கள்.
கேள்வி: நீங்கள் பொறியியலாளராகவோ அல்லது மருத்துவராகவோ படித்திருக்க முடியும். உங்களை மொழியியல் பக்கம் திருப்பியது எது? முதலில் மொழிகள் அல்லது மொழியியலை நோக்கி உங்களை ஈர்த்தது எது?
பேராசிரியை சதுபதி பிரச்சன்னாஸ்ரீ: இது ஒரு திட்டமிட்ட பயணம் அல்ல. நம்மை துன்புறுத்தும் மற்றும் எனது மனஅமைதியைக் கெடுக்கும் தொடர்ச்சியான பிரச்சினைகள் காரணமாக நான் கிட்டத்தட்ட இந்த பயணத்தில் தள்ளப்பட்டேன். ஒரு சக மனிதர் உங்களை ஒரு மனிதனாக அங்கீகரிக்காத போது, அது தானாகவே உங்களை கேள்வி கேட்கத் தள்ளுகிறது.
அப்போது தான் நான் "நான் ஏன் சரியாக நடத்தப்படவில்லை?" என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், வேறு யாரோ உயர்ந்தவர்கள் என்பதல்ல. அவர்கள் அவர்கள் தான். ஆனால் இது போன்ற ஏற்றத்தாழ்வுகள், சமூக கட்டமைப்பில் நிலவிய உணர்ச்சித் துன்புறுத்தல்கள்... எனக்கு அனைத்து (விரும்பிய) குணங்களும் இருக்கும் போது, நான் ஏன் தொந்தரவு செய்யப்படுகிறேன்? என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது.
நான் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான மக்கள், என் முன்னோர்கள், ஸ்டூவர்ட்புரம் போன்ற ஒரு இடத்துடன் அவர்களின் அடையாளம் பிணைக்கப்பட்டிருப்பதால் தவறாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அடிப்படையில், ஸ்டூவர்ட்புரமா? அல்லது பெங்களூருவைச் சேர்ந்தவர்களா? என்பது முக்கியமல்ல. விஷயம் என்னவென்றால், இவர்கள் பழங்குடியின மக்கள். அவர்களுக்கு முறையான கல்வி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் உணர்ச்சி மற்றும் உளவியல் நுண்ணறிவு உள்ளது. அவர்களின் மூளையும் அழகாக வேலை செய்கிறது. ஆனால் அவர்களுக்கு சொந்தமாக ஒரு அடையாளம் இல்லை. குறிப்பாக எழுத்து வடிவ மொழி இல்லை என்பது தான்.
அந்த வகையான அடையாளம் உங்களிடம் இல்லாத போது, நீங்கள் அவர்களுக்கு இணையாவர்கள் இல்லை என்று உணர வைக்கப்படுகிறீர்கள். உங்கள் அடையாளம் அவர்களின் அடையாளத்திற்குக் கீழே உள்ளது. நீங்கள் அவர்களின் காலடியில் தான் அமர வேண்டும். இந்த இடத்தில் கல்வி மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்து முறை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் நீங்கள் கல்விக்கான போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றால், மக்கள் தானாகவே உங்களை கீழே தள்ளி விடுவார்கள். நான் அப்படி இருக்க விரும்பவில்லை.
கேள்வி: மொழியே அடையாளமாகவும், அதுவே ஒருவரை மதிப்பதற்கான ஒரு வழியாகவும் நீங்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். அதுதான் உங்களை அழிந்து வரும் மொழிகளிடம் ஈர்த்ததா? இந்த எழுத்து முறைகளை உருவாக்க தூண்டியதா?
பேராசிரியை சதுபதி பிரச்சன்னாஸ்ரீ: நான் ஆரம்பத்தில் இதைச் செய்ய விரும்பிய போது, எந்த உண்மையான இலக்கையும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் முழு வீச்சில் ஈடுபடத் தொடங்கிய போது, என்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளின் உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது. பின்னர் நான் மட்டுமல்ல, நிறைய பேர் இது போன்ற ஒரு நிலையை பார்த்ததில்லை என்பதை உணர்ந்தேன். பெற்றோர்களும் படிக்கவில்லை, அவர்களும் படிக்கவில்லை. கல்வி, கல்வியாளர்கள்... அந்த வார்த்தைகளே பழங்குடியின மக்களை சென்றடையவில்லை.
இதையெல்லாம் நான் யோசித்த போது, நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 7% பேர் பழங்குடியினர். நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் அவலநிலை இது தான், குறிப்பாக ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களின் நிலை இது தான் என தெரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட அனைத்து பழங்குடியினரின் நிலையும் இது தான். அவர்களிடம் பேசும் மொழிகள் மட்டுமே இருந்தன. ஆனால், எழுத்து வடிவம் இல்லை.
பேசிக் கொண்டே இருந்தால் தான் ஒரு மொழி உயிர்ப்புடன் உள்ளதாக அர்த்தம். ஆனால் அந்தந்த மாநில மொழிகள் வரும் போது அல்லது பிற மொழிகள் உள்ளே வரும் போது, உங்கள் மொழியின் அசல் வடிவம் மற்றும் சுவையை இழக்கிறது. எனவே நீங்கள் உங்கள் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் உங்கள் மொழியை உயிருடன் வைத்திருக்க வேண்டும். அதுவும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.
கேள்வி: வாய்மொழிகள் என்பது எழுத்து வடிவம் இல்லாதவை. எனவே, வாய்மொழியாக இருக்கும் ஒரு மொழியை நீங்கள் எடுத்துக் கொண்டு, தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக மட்டும் இருந்து வந்த அந்த மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்க முயற்சித்தது எப்படி இருந்தது?
பேராசிரியை சதுபதி பிரச்சன்னாஸ்ரீ: அந்தக் காலத்தில், பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்குள் மட்டுமே வாழ்ந்தனர். அவர்களின் முன்னோர்களும் மூதாதையர்களும் வாய்மொழி மூலம், "குடும்பம்" என்பதை கட்டமைத்து அதனை வழி நடத்தினார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. நமது பழங்குடியின மக்களின் அடையாளத்தின் மீது மற்ற மொழிகளின் அழுத்தம் அதிகரித்துள்ளது. அதனால் என்ன நடக்கிறது என்றால், மக்கள் தங்களை பழங்குடியினர் என்று அடையாளப்படுத்துவதை மெதுவாக நிறுத்துகிறார்கள்.
நான் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற எனது அடையாளத்தை உலகிற்கு காட்டியவுடன், அனைவரும் என்னை இழிவாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் மனநிலை மிகவும் மோசமானது. அவர்கள் என்னை ஒரு படித்த பழங்குடியினத்தவராக பார்க்கவில்லை. ஒரு காலத்தில் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினரைப் போலவே பார்க்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் ஒரே அளவுகோல் இது தான்.
இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று நாளை நினைவில் வைத்திருக்க மாட்டீர்கள். மாறி வரும் இந்த உலகில் நம் மனது பல வெளிப்புற அழுத்தங்களுக்கு உட்பட்டது. இந்த சூழலில், ஒரு குறிப்பிட்ட இனத்தில் இருந்து, அதுவும் பழங்குடியினத்தில் இருந்து நான் வந்தேன் என்ற உணர்வை வழங்கும் ஒரு அடையாளம் எனக்கு தேவை என்று உணர்ந்தேன்.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் நம்முடைய சொந்த கலாச்சார அடையாளம் தேவை. நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. அமெரிக்கர்கள் அல்லது மேற்கத்திய சமூகங்கள் ஏன் நம்மை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்? ஏனென்றால் நமது கலாச்சார அடையாளம் வலுவானது. நீங்கள் மலையாளியா? தமிழரா? அல்லது வேறு ஏதாவது இனத்தைச் சேர்ந்தவரா? என்பதை விட இது முக்கியமானது. நீங்கள் வெளிநாடு செல்லும் போது, நீங்கள் பழங்குடியினரா? இந்துவா? அல்லது பிராமணரா? என்று யாரும் கேட்பதில்லை. அவர்கள், "நீங்கள் இந்தியரா" என்று தான் கேட்கிறார்கள். அது தான் நான் விரும்பும் அடையாளம். ஆனால் இங்கே, நமது சொந்த சமூகத்திற்குள், நிலைமை அப்படி இல்லை.
கேள்வி: மொழி என்பது அடையாளம். மதம் அல்லது இனத்தை விடவும் அது முக்கியமானது என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அழிந்து வரும் மற்றும் பழங்குடி மொழிகளுடன் நீங்கள் பணியாற்றுவதை பார்க்கும் போது, இந்த சமூகங்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை மீட்டெடுப்பது தான் உங்களது முயற்சி என எடுத்துக் கொள்ளலாமா?
பேராசிரியை சதுபதி பிரச்சன்னாஸ்ரீ: ஆம். அது தான் உண்மை. மக்கள் ஆங்கிலத்தின் மீது அதிக ஈடுபாடு காட்டி வரும் காலம் இது. ஆங்கிலம் நம்முடைய மொழி கிடையாது. இருப்பினும் நாம் ஆங்கிலத்தில் பேசுகிறோம் - சிந்திக்கிறோம். ஆனால் நமது உணர்வுகளை நமது தாய்மொழியில் தான் சரியாக வெளிப்படுத்த முடியும்.
கேள்வி: பழங்குடியின பின்னணி என்ற உங்கள் தனிப்பட்ட அடையாளம், உங்கள் பயணத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது? அது தவிர, நாரி புரஸ்கார் விருது மற்றும் இப்போது ராமோஜி சிறப்பு விருது போன்ற பல விருதுகளை நீங்கள் வென்றுள்ளீர்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பேராசிரியை சதுபதி பிரச்சன்னாஸ்ரீ: எனது பின்னணியை எடுத்துக் கொண்டால், எனது முன்னோர்கள் அனைவரும் பழமைவாதிகள். ஆனால் என் தந்தை அப்படி இல்லை. அவர் அவர்களிடம் இருந்து சற்று முன்னேறியவர். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று அவர் நம்பினார். ஒரு பெண் தனது சொந்த வேர்களைத் தேடி பழங்குடிப் பகுதிகளுக்குச் செல்வது எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த வகையான ஒரு நல்ல முயற்சியில் இறங்கும் பெண்ணை ஆண்கள் விரும்புவதில்லை. இது ஆணாதிக்கம். சமூகரீதியாக, எனது அடையாளத்தின் காரணமாக பலர் என்னை ஒதுக்கி வைத்தனர். ஆனால் நான் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. நான் என்ன செய்ய விரும்பினேனோ, அதைச் செய்தேன். உண்மையாக சொன்னால், நான் அதைச் செய்த போது, இந்த உலகம் என்னை இதைச் செய்ய சொல்லியது என்று உணர்ந்தேன். கடவுளும் இதை தான் செய்ய விரும்புகிறார். இதில் நான் ஒரு கருவி மட்டுமே.

