மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி
வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Published : March 2, 2026 at 2:24 PM IST
புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் தற்போதைய நிலைமை கவலை அளிப்பதாகவும், இந்தியா எப்போதும் அமைதியை தான் வலியுறுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி அவரது மனைவி டயானா ஃபாக்ஸ் கார்னியுடன் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். பிப்ரவரி 27 ஆம் தேதி வந்த அவரது பயணம் இன்று நிறைவடைகிறது. அவரது இந்த பயணத்தின் போது இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், கனிமத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
அதனைத் தொடர்ந்து கனடா பிரதமர் கார்னியுடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி, இந்தியாவும் கனடாவும் இணைந்து ஒரு விரிவான பொருளாதார ஒப்பந்தத்தை இறுதி செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுமே மனித குலத்தின் மேம்பாட்டை தான் தொலைநோக்கு பார்வையாக கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
| இதையும் படிங்க: ‘பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அழைத்து பிரதமர் மோடி வலியுறுத்தல் |
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கனடா பிரதமருடனான முதல் சந்திப்பிலிருந்தே எங்களுடைய உறவில் ஒரு புதிய எனர்ஜி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நேர்மறையான உணர்வு வெளிப்பட்டது. கார்னியின் தற்போதைய வருகையை ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கிறேன். விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இரு நாடுகளிடையேயான வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு வைத்திருக்கிறோம்” என்றார்.
Addressing the joint press meet with PM Mark Carney of Canada.@MarkJCarney https://t.co/p0PVHPlw0k
— Narendra Modi (@narendramodi) March 2, 2026
தொடர்ந்து கடந்த ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது கார்னியுடனான சந்திப்பின் தருணத்தை நினைவு கூர்ந்தார். மேலும், இரு நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைமைப் பணிகளில் கார்னியின் பங்கை பாராட்டினார். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், நாடுகளின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து, மேற்கு ஆசியாவில் தற்போதைய நிலைமை குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய நிலைமை மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியதோடு, இந்தியா எப்போதும் அமைதியைத் தான் வலியுறுத்தும் என்றார்.

