ETV Bharat / bharat

மக்கள் வாரிசுகளை விரும்புவதில்லை வளர்ச்சியை தான் விரும்புகிறார்கள்: பீகார் வெற்றி குறித்து மோடி பேச்சு!

மக்கள் வாரிசுகளை விரும்பவில்லை, வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதை பீகார் தேர்தல் முடிவு காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்) (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 8:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: பீகாரில் இனி ஒருபோதும் காட்டாட்சி திரும்பாது என ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக-ஜேடியூ கூட்டணி கைப்பற்றும் நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்த இந்த அணி இன்று மீண்டும் ஆட்சியை தன்வசப்படுத்தியுள்ளது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 90க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியூ, 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

அதே நேரத்தில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 06 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ முடிவின் அடிப்படையில் இதுவரை 125 தொகுதிகளில் பாஜக-ஜேடியூ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த வெற்றியை தொண்டர்களுடன் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பாஜக அலுவலத்திற்கு இன்று மாலை 7 மணிக்கு வருகை தந்தார்.

தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து அவர்களிடம் பேசினார். அப்போது அவர், "பீகாரில் இன்று கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நல்ல நிர்வாகத்தை வழங்கியதன் மூலம் மக்கள் மீண்டும் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் மீது வலிமையான நம்பிக்கையை மக்கள் அளித்துள்ளார்கள். பீகாரில் மறுவாக்கு பதிவுக்கான தேவை எங்குமே எழவில்லை. அந்த அளழுக்கு மிகச்சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்த வெற்றி பாஜகவுக்கு மட்டுமே கிடைத்த வெற்றி அல்ல, இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் ஜனநாயகம் எப்போதும் தோற்காது என்பதை இந்த தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது. பீகார் தேர்தல் வரலாற்றில் ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல் தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றுள்ளது. இது பீகார் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: கருத்துக்கணிப்புகளை தகர்த்தெறிந்த 'பெண்கள் சக்தி'... பீகார் தேர்தல் சொல்லும் சேதி என்ன?

தொடர்ந்து பேசிய அவர், "பீகாரில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிக்கு இளைஞர்கள் தங்களின் உறுதியான ஆதரவை அளித்துள்ளார்கள். போலி தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயம் அடையலாம் என்று நினைத்தவர்களுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்கள். ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு எப்போதும் இடமில்லை. அதை இந்த தேர்தலில் மக்கள் மீண்டும் ஓங்கி ஒலிக்க செய்துள்ளார்கள். மக்கள் வாரிசுகளை விரும்பவில்லை, வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். புண்ணிய பூமியான பீகாரில் இனி காட்டாட்சி திரும்பாது.

பீகாரில் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள். அவர்கள் அதிகாரத்திற்கு இனி எப்போதும் திரும்பப்போவதில்லை. இந்த வெற்றியின் மூலம் வளர்ச்சியின் பாதையில் பீகார் நடைபோடும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தபோது பீகார் பெற்ற அவப்பெயர்கள் துடைக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு இன்றைக்கு நாம் பெற்ற வெற்றியே சாட்சி. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்று பீகார் மக்கள் முடிவு செய்துள்ளார்கள். அதனை நிச்சயம் நிறைவேற்றி மீண்டும் ஒரு நல்லாட்சியை தரும் பணியை வெற்றிகரமாக செய்வோம்" என்றார்.

முன்னதாக, இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் நட்டா, "கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய கூடாது என பீகார் மக்கள் உறுதி கொண்டுள்ளார்கள். அதுவே தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. இரட்டை எஞ்சின் ஆட்சிக்கும், முதல்வர் நிதிஷ்குமார் நல்லாட்சிக்கும் மக்கள் ஆதரவளித்துள்ளார்கள். பீகாரில் காட்டு ராஜ்ஜியத்திற்கு எப்போதும் அனுமதி இல்லை என்பதை மக்கள் வாக்குகள் மூலம் நிரூபித்துள்ளார்கள்" என்றார்.